சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் சாலையோரத்தில் இருக்கும் 500-க்கும் மேற்பட்ட திறந்தவெளி கிணறுகளால் வாகனங்களில் செல்வோருக்கு விபத்து அபாயம் உள்ளது.
சாலையோரங்களில் இருந்த திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகளால் தொடர்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் உயிரிழப்பும் ஏற்பட்டன. இதையடுத்து 4 ஆண்டுகளுக்கு முன் அவற்றை கணக்கெடுக்கப்பட்டன.
மேலும் பயன்படாத திறந்தவெளி கிணறுகளை உடனடியாக மூடவும், பயன்பாடுள்ள திறந்த கிணறுகளுக்கு தடுப்புச்சுவர் அமைக்கவும் அரசு உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்பினர் நடத்திய ஆய்வில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திறந்தவெளி கிணறுகள் இருப்பது கண்டறியப்பட்டன. சில கிணறுகள் மட்டுமே மூடப்பட்டன. அதிலும் நெடுஞ்சாலை ஓரங்களில் பெரும்பாலான திறந்தவெளி கிணறுகள் மூடப்படாமல் உள்ளன.
சிவகங்கையில் இருந்து மானாமதுரை சாலையில் 10 கி.மீ.,க்குள் மேலவாணியங்குடி, சுந்தரநடப்பு, சாமியார்பட்டி அருகே 4 திறந்தவெளி கிணறுகள் உள்ளன.
சிவகங்கை புறவழிச்சாலையில் காந்திநகர் ரோடு பிரியும் இடம், மதுரை சாலையில் முத்துப்பட்டி அருகே, தொண்டிரோடு காட்டுகுடியிருப்பு அருகே, புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் திருப்பத்தூர் என்.புதூர் விலக்கு அருகே திறந்தவெளி கிணறுகள் உள்ளன.
கீழச்செவல்பட்டி பந்தயபொட்டல் பகுதியிலும், வீரமதி ஒய்ரோடு அருகிலும் சாலையோர குவாரி பள்ளங்கள் உள்ளன. இதேபோல் மாவட்டம் முழுவதும் சாலையோரங்களில் 500-க்கும் திறந்தவெளி கிணறுகள் உள்ளன.
இவற்றால் வாகனங்களில் செல்வோருக்கு விபத்து அபாயம் உள்ளது. சில தினங்களுக்கு முன் பயன்படாத ஆழ்த்துளை கிணற்றில் விழுந்து சிறுவன் சுஜித்வில்சன் இறந்தான்.
இதையடுத்து பயன்பாடில்லாத ஆழ்த்துளை கிணறுகள் மூடப்பட்டு வருகின்றன. இதேபோல் சாலையோர கிணறுகளை மூடவும், மூட முடியாத இடங்களில் தடுப்புச் சுவர் அமைக்கவும், தற்காலிகமாக எச்சரிக்கை பலகைகள் வைக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.