கொல்லப்பட்ட ஜானகிராமன், பூசாரி ஓம் பிரகாஷ் 
தமிழகம்

ஐசிஎப் அண்ணா தொழிற்சங்க நிர்வாகி கொலை வழக்கு: கூட்டாளிகளுடன் பூசாரி கைது

செய்திப்பிரிவு

சென்னை

தீபாவளி அன்று இரவு கொளத்தூரை அடுத்த பட்மேடு சுடுகாடு அருகே வெட்டிக் கொல்லப்பட்ட அண்ணா தொழிற்சங்க நிர்வாகி கொலையில் கோயில் பூசாரி உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை வில்லிவாக்கம் ராஜமங்கலம் ஏழாவது தெருவைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (50). இவர் ஐசிஎஃப்-ல் ஃபிட்டராகப் பணியாற்றி வந்தார். ஐசிஎஃப் அண்ணா தொழிற்சங்கத்தின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். நேற்று இரவு 10 மணியளவில் அளவில் கொளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பட்மேடு சுடுகாடு அருகே, தனது இருசக்கர வாகனத்தில் நண்பருடன் வந்துகொண்டிருந்த அவரை மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று வழிமறித்து சரமாரியாக வெட்டியது. தடுக்க வந்த நண்பருக்கும் வெட்டு விழுந்தது.

இதில் ஜானகிராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலை குறித்துத் தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு வந்த பெரவள்ளூர் போலீஸார் ஜானகிராமனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் சில தகவல்கள் கிடைத்தன. ஜானகி ராமன் அப்பகுதியில் உள்ள ஸ்ரீதேவி இளங்காளியம்மன் கோயிலில் செயலாளராக இருந்து வந்துள்ளார் .

நேற்று தீபாவளி சிறப்புப் பூஜையின்போது கோயில் பூசாரியான ஓம் பிரகாஷ் (23) என்பவர் கஞ்சா போதையில் கோயிலுக்குள் வந்ததுள்ளார். இதை ஜானகிராமன் கண்டித்து பூசாரியைக் கோயிலை விட்டு வெளியேற்றியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பூசாரி ஓம் பிரகாஷ் நண்பர்களுடன் வந்து கொலை செய்ததாகத் தெரியவந்தது.

தலைமறைவாக இருந்த கோயில் பூசாரி ஓம் பிரகாஷை போலீஸார் தேடிப் பிடித்தனர். அவர் அளித்த தகவலின் பேரில் கூட்டாளிகள் குமரன் (25), ரவி பிரசாத் (22), சரத்குமார் (26), சரபோஜி (22), விஜய் (25), அனீஷ் (25) ஆகிய 6 பேரைக் கைது செய்தனர்.

விசாரணையில் தனக்குக் கிடைத்த அரசு வேலையைக் கிடைக்கவிடாமல் ஜானகிராமன் தடுத்ததால் ஆத்திரத்தில் இருந்தேன். அன்று கஞ்சா புகைத்துவிட்டு கோயிலுக்கு வந்தேன். அப்போது கோயிலுக்குள் கஞ்சா புகைக்கிறாயா என என்னை விரட்டிவிட்டார். அந்த கோபத்தில் நண்பர்களுடன் சேர்ந்து அவரைக் கொலை செய்தேன் என ஓம் பிரகாஷ் தெரிவித்துள்ளதாக போலீஸ் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT