கேரள போலீஸாரின் என்கவுன்ட்டரில் சென்னை உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 3 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்ட நிலையில் முக்கிய மாவோயிஸ்ட் தலைவர் ஒருவரின் உடலும் குண்டடிப்பட்ட காயத்துடன் மீட்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மார்க்சிய இயக்கத்தைக் கட்டுவதில் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் 1964-ல் கொள்கை ரீதியான பிளவு ஏற்பட்டு இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என இரண்டாகப் பிரிந்தது. ஜனநாயக ரீதியாக மக்களைத் திரட்டி சோஷலிச பாதையை நோக்கிச் செல்வது என்கிற நடைமுறையை ஏற்க மறுத்த அதில் ஒரு பிரிவினர் ஆயுதப் போராட்டமே சிறந்தது என முடிவு செய்து, அதிதீவிர இடதுசாரி எண்ணம் கொண்டோர் 1968-ல் தனியாகப் பிரிந்தனர்.
இவர்களை நக்சலைட்டுகள் என்றும் மாவோயிசத்தைப் பின்பற்றுவதால் மாவோயிஸ்ட்டுகள் எனவும் அழைக்க ஆரம்பித்தனர். 1972-களில் நக்சல்களுக்கு எதிராக என்கவுன்ட்டர் எனும் முறையைத் தமிழக போலீஸார் கையிலெடுத்தனர். இதேபோன்று பல மாநிலங்களில் அரசுக்கெதிராக குழுக்களாக இயங்கும் மாவோயிஸ்ட்டுகளைக் கைது செய்வது, என்கவுன்ட்டர் செய்வது தொடர்கிறது. தமிழகம், கேரளா, ஆந்திரா என ஒருங்கிணைப்புடன் மாவோயிஸ்ட்டுகள் செயல்படுகின்றனர்.
மாவோயிஸ்ட்டுகளைப் பிடிக்க தண்டர் போல்ட் எனும் சிறப்பு கமாண்டோ படைப்பிரிவை கேரள அரசு வைத்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அகாலி வனப்பகுதிக்குள் தண்டர் போல்ட் படைப்பிரிவு போலீஸாருடன் நடந்த மோதலில் கார்த்திக், சுரேஷ் (எ) அரவிந்தன், ஸ்ரீமதி ஆகிய 3 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
சுரேஷ் (எ) அரவிந்தன்
இதில் அரவிந்தன் மற்றும் கார்த்திக் இருவரும் சென்னையைச் சேர்ந்தவர்கள். கார்த்திக் சென்னை சிஐடி நகரைச் சேர்ந்தவர் எனக் கேரள போலீஸார் கண்டறிந்துள்ளனர். கார்த்திக் தேனி மாவட்டத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் ஜாமீனில் வெளிவந்து தலைமறைவானார்.
அரவிந்தன் மாவோயிஸ்ட் இயக்கத்துப் புதுவரவு. அவர் மீது போலீஸ் ரெக்கார்டு எதுவும் இல்லை என்கின்றனர். ஸ்ரீமதி யார் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்கிற எந்தத் தகவலும் போலீஸாரின் ஆவணங்களில் இல்லை எனக் கேரள போலீஸார் தெரிவித்துள்ளனர். பொதுவாக மாவோயிஸ்ட்டுகள் தங்களின் சொந்த அடையாளத்தை வெளிப்படுத்தமாட்டார்கள். பல்வேறு பெயர்களில் நடமாடுவார்கள் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.
கார்த்திக்
அன்று நடந்த மோதலில் காயம்பட்டுத் தப்பித்துச் சென்ற மாவோயிஸ்ட்டுகளின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகளால் நிறுவப்பட்டுள்ள ‘பவானி தளம்’ அமைப்பின் தலைவரும், அரசால் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட்டுகளின் ‘மேற்குத் தொடர்ச்சி மலைப்பிராந்திய சிறப்பு மண்டலக் குழு’ உறுப்பினருமான சேலத்தைச் சேர்ந்த மணிவாசகம் நேற்று பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீமதி
கடந்த 35 ஆண்டுகளாகத் தீவிரமாகச் செயல்பட்டவர் மணிவாசகம். பல ஆண்டுகளுக்கு முன் தமிழக போலீஸாரால் கைது செய்யப்பட்ட மணிவாசகம் ஜாமீனில் வெளிவந்து தலைமறைவானார். இவரது மனைவி சந்திராவும் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்.
அவர் கடந்த 2016-ம் ஆண்டு கரூரில் கைது செய்யப்பட்டார். மணிவாசகத்தின் மைத்துனர் சுந்தரமூர்த்தியும் ஒரு மாவோயிஸ்ட். அவர் தற்போது புழல் சிறையில் உள்ளார். இவர்கள் அனைவரும் இயக்கமாகச் செயல்படும் இடம் தமிழகம், ஆந்திர, கேரளாவில் உள்ள முக்கிய இடமான முச்சந்திப்பு என்பார்கள்.
ஜாமீனில் வெளிவந்து தலைமறைவான மணிவாசகம் பின்னர் முச்சந்திப்பில் போய் இணைந்து செயல்பட்டு வந்துள்ளார். தற்போது கடந்த வாரம் 3 பேர் கொல்லப்பட்ட நிலையில் தற்போது முக்கிய மாவோயிஸ்ட் தலைவர் மணிவாசகமும் பிணமாக மீட்கப்பட்ட நிலையில் என்கவுன்ட்டர் மூலம் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.
கொல்லப்பட்டவர்கள் உடலை வாங்க உறவினர்கள், நண்பர்கள் வருகைக்காக போலீஸார் காத்திருக்கின்றனர்.