முகிலன்: கோப்புப்படம் 
தமிழகம்

தலைமறைவு நாட்களில் முகிலன் எங்கிருந்தார்? பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கி.மகாராஜன்

மதுரை

தலைமறைவாக இருந்த நாட்களில் முகிலன் எங்கிருந்தார் என்பதைத் தெரிவிக்க முகிலன் தரப்புக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சமூகச் செயற்பட்டாளர் முகிலன் என்ற சண்முகம். இவர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு தொடர்பாக சென்னையில் செய்தியாளர்கள் மத்தியில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதையடுத்து கடந்த ஆண்டு பிப்.15-ல் திடீரென மாயமானார். இவர் மாயமான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அவர் மீது சிபிசிஐடி போலீஸார் பாலியல் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு திருப்பதி ரயில் நிலையத்தில் முகிலன் கைது செய்யப்பட்டார். தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முகிலன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று (அக்.30) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பாலியல் புகார் காரணமாக முகிலன் தலைமறைவானாரா? எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு முகிலன் வழக்கறிஞர், முகிலனை சிலர் கடத்திச் சென்றனர் என்றார்.

இதையேற்க மறுத்த நீதிபதி, தலைமறைவாக இருந்த நாட்களில் முகிலன் எங்கிருந்தார்? என்பது தொடர்பாக முகிலன் தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, ஜாமீன் மனு மீதான விசாரணையை நவ.6-ம்தேதிக்கு ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT