சென்னை அருகே ரூ.1200 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை தனியார் அபகரிக்க உடந்தையாக இருந்த சார்பதிவாளர் கைது செய்யப்பட்டர்.
சென்னை அருகே பள்ளிக்கரணையில் இருக்கும் அரசுக்குச் சொந்தமான 66 ஏக்கர் 70 சென்ட் நிலத்தை (ரூ.1200 கோடி மதிப்பு) சில நபர்கள் போலியான ஆவணங்கள் மூலம் அபகரித்துள்ளதாக முதல்வர் தனிப்பிரிவில் தண்டையார் பேட்டையைச் சேர்ந்த சிவசூர்யன் என்பவர் புகார் அளித்தார். இந்த மனு தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக பாலாஜி, பாஸ்கரன், கலீல் ரகுமான், முருகையா பாண்டியன், சாமிநாதன், செந்தில்குமார், வினோத் கண்ணன் ஆகிய 7 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டபோது, எம்.கே.சிவசுப்பிரமணியம் என்பவர் சைதாப்பேட்டை சார்-பதிவாளராக இருந்தபோது மேற்குறிப்பிட்ட அரசு நிலத்தை லட்சுமணன் என்பவர் பெயரில் போலி ஆவணம் செய்வதற்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து, சிவசுப்பிர மணியத்தை போலீஸார் நேற்று கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட் டார்.