தமிழகம்

கூடங்குளம் அணுமின் நிலைய இணையதளம் ஹேக் செய்யப்பட்டதா?- நிர்வாகம் விளக்கம்

செய்திப்பிரிவு

கூடங்குளம்

கூடங்குளம் அணுமின் நிலையத் தகவலைகளை இணையத்தின் வாயிலாக ஹேக்கர்கள் திருடிவிட்டதாக கூறப்படுவதற்கு அணுமின் நிலைய அதிகாரிகள் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய அணுசக்தி நிலையங்களின் கட்டுப்பாட்டு கணினிகள் தனியாக இயங்குபவை. வெளியில் உள்ள வலைபின்னலுடனோ, இணையத்துடனோ இணைக்கப்படாதவை. அணுசக்தி நிலைய கட்டுப்பாட்டுக் கணினிகள் மீது சைபர் தாக்குதல் நடத்துவது சாத்தியமில்லாதது.

தற்போது கூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஒன்று மற்றும் இரண்டாவது அணு உலைகள் முறையே 1000 மெகாவாட் மற்றும் 600 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்துவருகின்றன.

அணு உலையை இயக்குவது தொடர்பாகவோ, பாதுகாப்பு தொடர்பாகவோ எவ்வித பிரச்சனையும் இல்லை" எனக் கூறப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் மற்றும் 2-ம் அணு உலைகள் மூலம் மின்னுற்பத்தி நடைபெற்று வருகிறது. 3 மற்றும் 4-வது உலைகளுக்கான பணிகளும் முடியும் தருவாயில் உள்ளன. இந்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இணையதளத்தை ஹேக் செய்து அணுமின் நிலையத்தின் தகவல்கள் அனைத்தையும் எடுத்துவிட்டதாக தகவல் பரவியது.

மேலும், அணுமின் நிலையம் செயலிழக்க வாய்ப்புள்ளதாகவும், முதல் மற்றும் இரண்டாம் உலைகளில் மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் பரவின.

இந்நிலையில், இந்தத் தகவல் பொய்யானது என மறுத்துள்ள நிர்வாகம் இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.

SCROLL FOR NEXT