புதுச்சேரி
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் இறப்பு இந்தியாவில் உள்ள அனைத்து அரசுக்கும் ஒரு பாடம் என, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வேங்கைக்குறிச்சி அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25-ம் தேதி மாலை 600 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் 2 வயது குழந்தை சுஜித் வில்சன் தவறி விழுந்தான். அவனை மீட்பதற்கான பணி கடந்த 4 நாட்களாக தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இன்று (அக்.29) அதிகாலை குழந்தை சுஜித் வில்சன் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டான். குழந்தை சுஜித் வில்சன் மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அவனது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சுஜித் இறப்பு இந்தியாவில் உள்ள அனைத்து அரசுக்கும் ஒரு பாடத்தை கொடுத்துள்ளது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது, "ஆழ்துளை கிணற்றில் சுஜித் என்ற குழந்தை தவறி விழுந்தது. அந்த குழந்தையை மீட்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டது. ஆனால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை.
குழந்தை சுஜித்தை உயிரோடு மீட்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்த கோடிக்கணக்கான மக்கள் எல்லோருக்கும் அவனது உயிரிழப்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுஜித்தின் மரணம் இரண்டு விதத்தில் இந்திய நாட்டில் உள்ள அனைத்து அரசுகளுக்கும் ஒரு பாடத்தை கொடுத்துள்ளது.
ஒன்று பயன்படாமல் இருக்கின்ற ஆழ்துளை கிணறுகளை மூடி வைக்க வேண்டும். இரண்டாவது ஆழ்துளை கிணறுகளில் தவறி விழும் குழந்தைகளை நல்ல தொழில்நுட்பத்துடன் மீட்பதற்கான பயிற்சி பெற்றவர்கள் இருக்க வேண்டும் என்பதை தெளிவாக காட்டுகிறது. குழந்தை சுஜித்தின் மரணம் இன்றைய தினம் நம்மையெல்லாம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
குழந்தை சுஜித் இறப்புக்கு புதுச்சேரி மக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் அவனது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு புதுச்சேரியில் விவசாயத்துறை அதிகாரிகள், தீயணைப்புத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக பயன்படாமல், மூடப்படாமல் இருக்கின்ற ஆழ்துளை கிணறுகளை களத்துக்கு சென்று ஆய்வு செய்து மூட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். இன்று மாலை அவர்களை அழைத்துப் பேச உள்ளேன். புதுச்சேரியில் அனைத்து பயன்படாத, உபயோகத்தில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூட எங்கள் அரசு நடவடிக்கை எடுக்கும்," என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.