தமிழகம்

சுஜித் மரணம் வேதனையளிக்கிறது: நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் ட்வீட்

செய்திப்பிரிவு

சென்னை

விளையாடிக் கொண்டிருந்தபோது ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித் இறந்ததற்கு இரங்கல் தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் ட்வீட் செய்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "சுஜித்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது, அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும். சுஜித்தின் பெற்றோருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த குழந்தை சுஜித் வில்சன் (2). இந்தக் குழந்தை கடந்த 25-ம் தேதி மாலை 5.40 மணியளவில் வீட்டின் பின்புறம் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. இதனைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்றன.

சுமார் 80 மணி நேரத்துக்கு மேலாக மீட்புப் பணிகள் நடைபெற்றும் குழந்தையை உயிருடன் மீட்க இயலவில்லை. இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் குழந்தை சுஜித் இறந்துவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்திருக்கிறார்.

முன்னதாக நேற்று (திங்கள்) மாலை ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் பேசினார். அப்போது அவர், குழந்தையை உயிருடன் மீட்க வேண்டும் என்று ஆதங்கத்தைத் தெரிவித்ததோடு குழந்தைகளுக்காகவே முழு நேரம் செயல்படும் அமைப்பு பற்றியும் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இன்றும் அவர் தனது இரங்கலைத் தெரிவித்ததோடு பெற்றோர் குழந்தைகள் விளையாடும்போதும் பாதுகாக்க வேண்டும் என அறிவுரை கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT