சென்னை
குழந்தை சுஜித்தின் தாயாருக்கு அரசுப்பணி வழங்கி ஆதரவளிக்க வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக இரா.முத்தரசன் இன்று (அக்.29) வெளியிட்ட அறிக்கையில், "திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகில் உள்ள நடுக்காட்டுபட்டியில், மூடப்படாமல் கிடந்த ஆழ்குழாய் கிணற்றில் கடந்த 25 ஆம் தேதி மாலையில் 2 வயது சிறுவன் சுஜித் வில்சன் தவறி விழுந்தார். இந்த அதிர்ச்சி அளிக்கும் செய்தி கிடைத்ததும், அவரை உயிரோடு மீட்க எல்லா விதமான முயற்சிகளும் அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டன.
ஒட்டு மொத்த தமிழகமும் ஏன் உலகம் முழுவதும் மனிதாபிமானம் உள்ளவர்கள், சுஜித் வில்சன் உயிரோடு மீட்கப்பட வேண்டும் என வேண்டிக் கொண்டனர். தொடர் முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் சிறுவன் சுஜித்தை உயிரோடு மீட்க முடியவில்லை. அவர் மரணமடைந்து விட்டதாக இன்று அதிகாலை 02.30 மணிக்கு அறிவிக்கப்பட்டது.
கட்டிடத் தொழிலாளி குடும்பத்தின் குல விளக்காக விளங்கிய சுஜித்தை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினரை என்ன வார்த்தை கூறியும் ஆறுதல் படுத்த இயலாது. காலம் தான் அவர்களை ஆற்றுப்படுத்த வேண்டும். சுஜித்தின் தயார் கலாமேரி,12 ஆம் வகுப்பு பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார். இவருக்கு அரசுப்பணி வழங்கி, அவரது குடும்பத்திற்கு நிதி வழங்கி ஆதரவு காட்ட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
விஞ்ஞான வளர்ச்சியில் நாடு முன்னேறியுள்ள போதிலும் பேரிடர் காலங்களில், ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் வாழும் உயிர்களை மீட்பதில் இன்னும் புதிய தொழில் நுட்பங்களை கண்டறிவதும், அதனை பயன்படுத்துவதும் அவசியம் என்பதை சுஜித்தின் உயிர் இழப்பு உணர்த்துகிறது. மத்திய, மாநில அரசுகள் இதில் கவனம் செலுத்த வேண்டும்.
உயிரிழந்து விட்ட குழந்தை சுஜித் வில்சனுக்கும், அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்," என இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.