சென்னை,
குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளதால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை மையத்தின் தென் மண்டல தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
“நேற்று இலங்கையை ஒட்டியுள்ள பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது குமரிக் கடல் பகுதிக்கு நகர்ந்து அங்குக் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக நிலவுகிறது. இது அடுத்து வரும் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் .
அதனைத் தொடர்ந்து அடுத்து வரக்கூடிய 24 மணி நேரத்திற்குப் பிறகு அதாவது அக்டோபர் 31-ஆம் தேதி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் .
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது அதிகபட்சமாகத் திருவாரூரில் 7 செ.மீ. மழையும் மாமல்லபுரத்தில் 6 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.
அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும் வடதமிழகத்தில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழையை பொறுத்தவரையில் தென் தமிழக மாவட்டங்களான குமரி ,நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களிலும் வட தமிழக மாவட்டங்களில் கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி ,தர்மபுரி, இந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
மீனவர்கள் மன்னார் வளைகுடா, தென் தமிழகப் பகுதிகள், குமரிக் கடல் பகுதியில் மாலத்தீவு, லட்சத் தீவு பகுதிகளுக்கு 29, 30, 31 தேதிகளில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னை மற்றும் புறநகரைப் பொருத்தவரை சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்”.
இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.