குழந்தை சுஜித்தை அடக்கம் செய்த இடத்தில் ஸ்டாலின் அஞ்சலி 
தமிழகம்

சுஜித்தின் உயிரிழப்புக்குக் காரணம் அரசின் மெத்தனப்போக்கு: பெற்றோருக்கு நேரில் ஆறுதல் கூறிய பின் ஸ்டாலின் பேட்டி

செய்திப்பிரிவு

திருச்சி

குழந்தை சுஜித்தின் உயிரிழப்புக்கு அரசின் மெத்தனப்போக்கும் காரணம் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித் இன்று (அக்.29) சடலமாக மீட்கப்பட்டான். மீட்கப்பட்ட குழந்தையின் உடல் உடனடியாக மணப்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. உடற்கூராய்வுக்குப் பின் அமைச்சர்கள் குழந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிறுவன் சுஜித்தின் உடல் பாத்திமா புதூரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அவனது உடலுக்குப் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சுஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், மு.க.ஸ்டாலின் இன்று குழந்தை சுஜித் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு சென்று, மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர், சுஜித்தின் இல்லத்துக்கு சென்று பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். மேலும், திமுக சார்பாக ரூ.10 லட்சம் நிவாரண நிதியையும் வழங்கினார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், "சுமார் 80 மணிநேரம் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த குழந்தை சுஜித்தை உயிருடன் மீட்க முடியவில்லை. மகனை இழந்த பெற்றோருக்கும் குடும்பத்தாருக்கும் ஆறுதல் சொன்னேன். மீட்புப்பணியில் தமிழக அரசின் மெத்தனப்போக்கும் இதற்கொரு காரணம். எந்த இடத்தில் பாறை இருக்கிறது, அவை கடினப்பாறையா, மென்மையான பாறையா, அங்கிருக்கும் மண்ணின் தன்மை ஆகியவற்றை அறிந்து வைத்திருப்பது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்.

குழந்தை 26 அடியில் இருக்கும் போதே காப்பாற்றியிருக்க முடியும். அமைச்சர்களும் அதிகாரிகளும் தொலைக்காட்சிக்கு பேட்டி தருவதில் காட்டிய ஆர்வத்தை மீட்புப்பணியில் இல்லையோ என்ற ஏக்கம் எல்லோருக்கும் இருக்கிறது. இந்த சம்பவம் நடந்த உடனேயே தேசிய பேரிடர் மீட்புத் துறையை அழைத்திருக்க வேண்டும். ராணுவத்தையும் அழைத்திருக்க வேண்டும். ஏன் அழைக்கவில்லை என்பது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. அரசை குறை சொல்வதற்காக இவற்றை நான் கூறவில்லை. சுஜித்துக்கு ஏற்பட்டிருக்கும் கொடுமை யாருக்கும் ஏற்படக் கூடாது என்பதுதான் என் எண்ணம்.

மீட்புப் பணிகளின் போதே நான் நேரில் வந்து பார்த்திருக்கலாம். ஆனால், அதற்கு அரசியல் சாயம் பூசுவார்கள் என்பதாலேயே தவிர்த்தேன். தொலைக்காட்சிகளில் தொடர்ந்து பார்த்தேன். அதில் பேசிய நிபுணர்களின் கருத்துகளின் படி, அரசு இந்த விஷயத்தில் மெத்தனப்போக்குடன் தான் இருந்திருக்கிறது," என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT