சென்னை
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று 4-வது நாளாக தொடர்ந்ததால் அரசுமருத்துவமனைகளில், நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசு டாக்டர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த 25-ம் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 4-வது நாளாக வேலைநிறுத்தம் தொடர்ந்தது. இதனால், தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற முடியாமல் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான பெரிய மற்றும் சிறிய அறுவை சிகிச்சைகள் நடைபெறாததால் இதயம், சிறுநீரகம், நரம்பியல், கல்லீரல் போன்ற பல்வேறு பாதிப்புகளுடன் உள்நோயாளிகளாக இருந்து, சிகிச்சைப் பெற்று வருபவர்களின் உடல்நிலை மோசமடைந்து வருகிறது.
சில மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இல்லாததால், நோயாளிகள் உயிரிழக்கும் நிகழ்வுகளும் நடக்கின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 1,500-க்கும் மேற்பட்ட அரசு டாக்டர்களில், பெருமாள் பிள்ளை, நீர் முகிப் அலி,பால மணிகண்டன், ரமா மற்றும் சுரேஷ் கோபால் ஆகிய 5 பேர் வேலை நிறுத்தத்துடன் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தையும் தொடங்கினர்.
நேற்று 4-வது நாளாக தொடர்ந்த உண்ணாவிரதத்தின்போது சுரேஷ்கோபால், ரமா ஆகியோரின் உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்குச் சென்றது. இதையடுத்து, 2 பேரும்இதே மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர். முன்னெச்சரிக்கை யாக மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக டாக்டர்களிடம் கேட்டபோது, “எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தொடர்ந்து பல போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம். கடந்த 2 மாதங்களுக்கு நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தின்போது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உறுதி அளித்தார். அதனால், வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றோம்.
ஆனால், அமைச்சர் வாக்குறுதி அளித்தபடி கோரிக்கைகளை நிறைவேற்றாமல் எங்களை ஏமாற்றிவிட்டார். அதனால், மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறோம். முதல்வர்தலையிட்டு உடனடியாக எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அதுவரை எங்களுடைய போராட்டம் தொடர்ந்து நடைபெறும்” என்றனர்.