திருச்சி
பயனில்லாத ஆழ்துளை கிணறுகளை மூடாமல் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எச்சரித்துள்ளார்.
மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுஜித் வில்சனை மீட்பதற்காக நடைபெற்று வரும் பணிகளை நேற்று முன்தினம் இரவு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மீட்புப் பணிகள் குறித்து அரசு முதன்மைச் செயலரும், வருவாய் நிர்வாக ஆணையருமான ஜெ.ராதாகிருஷ்ணன், ஆட்சியர் சு.சிவராசு ஆகியோரிடம் கேட்டறிந்த துணை முதல்வர், குழந்தை சுஜித் வில்சனின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்த தகவல்அரசின் கவனத்துக்கு வந்தவுடனேயே மாவட்ட நிர்வாகம், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழு, வருவாய், தீயணைப்பு, காவல், மக்கள் நல்வாழ்வு, ஊரக வளர்ச்சி உட்பட அரசின் பல்வேறு துறைகள் ஒருங்கிணைத்து மீட்கும் பணி நடைபெற்றது.
ஆனால், குழந்தை 82 அடி ஆழத்துக்குச் சென்றுவிட்டதால், புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதிநவீன இயந்திரங்கள் கொண்டு பணிகள் நடைபெற்றாலும் பாறையாக இருப்பதால் பணிகள் தாமதமாகின்றன. நவீன ரிக் இயந்திரம் கொண்டு அருகிலேயே 90 அடிக்கு ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பயனில்லாத ஆழ்துளை கிணறுகள் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் தாங்களே முன்வந்து மூட வேண்டும். இல்லையெனில், மாவட்ட நிர்வாகம் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்று எதிர்பாராதவிதமாக பேரிடர் ஏற்படும்போது அதை எதிர்கொள்ள புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய இயந்திரங்கள் வாங்கவும், கண்டுபிடிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்கும். ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தையை மீட்க அரசு முழு வீச்சில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற் கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், என்.நடராஜன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.வளர்மதி, தேனி எம்பி ப.ரவீந்திரநாத் குமார், கந்தர்வகோட்டைஎம்எல்ஏ ஆறுமுகம், மாவட்ட எஸ்.பி. ஜியாவுல் ஹக், ஸ்ரீரங்கம் சார் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.