தமிழகம்

வங்கியில் கடன் பெற்றுத் தருவதாக நூதன மோசடி; கிராமங்களை குறிவைக்கும் கும்பல்: மக்கள் விழிப்புடன் இருக்க போலீஸார் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

இ.ராமகிருஷ்ணன்

சென்னை

வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தருவதாக மோசடியில் ஈடுபட்டு வரும் கும்பல் தற்போது கிராமத்து மக்களை அதிக அளவில் குறிவைத்து செயல்படுவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பிரபலமான நிதி நிறுவனங்களில் இருந்து பேசுவதாகக் கூறிதொலைபேசி மூலம் பொதுமக்களை தொடர்பு கொள்ளும் கும்பல்ஒன்று வங்கிகள், நிதி நிறுவனங்களில் குறைந்த வட்டிக்கு கடன்பெற்றுத் தருவதாக கூறி வாடிக்கையாளர்களின் வங்கி விவரங்களை சேகரித்து அதன்மூலம் அவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து கோடிக்கணக்கான பணத்தை நூதன முறையில் திருடி வருகிறது.

இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் வேங்கைவாசல் பகுதியில் போலி கால்சென்டர் அமைத்து வாடிக்கையாளரிகளிம் பேசி நூதனமுறையில் பண மோசடி செய்த விழுப்புரம் மணிகண்டன் உட்பட 14 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்களில் 5 பேர் பெண்கள். தலைமறைவாக உள்ள மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

செல்போன் எண்கள்இதுகுறித்து வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீஸார் கூறியதாவது:துணிக்கடை, நகைக்கடை, வணிக நிறுவனங்களிடம் இருந்துவாடிக்கையாளர்களின் எண்களை இந்த மோசடி குழுவினர் பணம் கொடுத்து பெற்றுக் கொள்கின்றனர்.

அதன் பின்னர், போலி கால்சென்டர் அமைத்து அதில் இனிமையாக பேசும் பெண்களைக் கொண்டு குறைந்த வட்டிக்கு கடன் பெற்றுத் தருவதாக பொதுமக்களிடம் பேசவைக்கின்றனர். வாடிக்கையாளர்களின் மனநிலைக்கு ஏற்ப தொடர்ந்து அழைக்கின்றனர். இதில், 20 சதவீதம் பேரின் வங்கி தகவல்களை பெற்று, அடுத்த சில விநாடியே பணத்தை திருடி விடுகின்றனர்.

தற்போது இந்த கும்பல் டெல்லிக்கு இடம் பெயர்ந்து அங்கு போலி கால்சென்டரை அமைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த கும்பல் தமிழகத்தில் குறிப்பாக கிராம மக்களை குறிவைத்து செயல்படுகிறது. இவர்களை விரைவில் கைது செய்வோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கடன் வாங்கித் தருவதா கவோ, கிரெடிட் கார்டு லிமிட்டைஅதிகப்படுத்தி தருவதாகவோ, ரிவார்டு பாயின்ட் வந்திருப் பதாகவோ, வேலை வாங்கி தருவ தாகவோ கூறினால், தங்களுடைய டெபிட் அல்லது கிரெடிட் கார்டு எண்களையும் ரகசிய குறியீட்டு எண்களையும் தெரிவிக்கக்கூடாது.

மேலும் தனிநபர் ஒருவரின் வங்கிக்கணக்கின் விவரங்களை ஒருவர் கேட்கிறார் என்றாலே அது மோசடிக்காகத்தான் என்பதை மக்கள் உணர வேண்டும். 3 மாதங்களுக்கு ஒரு முறையேனும் ரகசிய குறியீட்டு எண்ணை மாற்ற வேண்டும். எந்த இணைய இணைப்பையும் தேவையின்றி பதிவிறக்கம் செய்யக் கூடாது என சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT