தமிழகம்

2 தொகுதி இடைத்தேர்தல் வெற்றியால் உற்சாகம்: உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க தயாராகும் அதிமுக

செய்திப்பிரிவு

கி.கணேஷ்

சென்னை

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வெற்றி யைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலையும் சந்திக்க அதிமுக தயாராகி வருகிறது. தமிழகத்தில் கடந்த ஏப்ரலில் மக்களவைத் தேர்தலுடன் காலி யாக இருந்த 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்த லும் நடந்தது. பாமக, பாஜக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சி களுடன் மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுக, தேனி மக்க ளவைத் தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அத்துடன் 9 சட்டப்பேரவைத் தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத் துக் கொண்டது.

அதன்பின் நடந்த வேலூர் மக்களவைத் தொகுதி தேர் தலில் மிகக் குறைந்த வித்தி யாசத்தில் திமுகவிடம் வெற்றியை பறிகொடுத்தது. அதிமுகவின் வாக்கு சதவீதம் அதிகரித்ததால் கட்சியினர் உற்சாகம் அடைந்தனர்.

இந்நிலையில், விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி களுக்கான இடைத்தேர்தல் கடந்த 21-ம் தேதி நடந்தது. இந்த இரு தொகுதிகளும் திமுக, காங்கிரஸ் வசம் இருந்தவையாகும். கடும் போட்டி ஏற்பட்ட நிலையிலும் இந்த தொகுதிகளை அதிக வாக்கு வித்தியாசத்தில் அதிமுக கைப்பற்றியது.

மக்களவைத் தேர் தல் முடிந்த 5 மாதத்தில் நடந்த இடைத்தேர்தலில் 2 தொகுதிகளை யும் கைப்பற்றியதால் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள், நிர்வாகி கள், தொண்டர்கள் என கட்சியினர் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர். இதே உற்சாகத்தில் உள்ளாட்சித் தேர்தலையும் எதிர்கொள்ள தயா ராகி வருகின்றனர்.

மின்னணு இயந்திரங்கள் கிடைக்காததால் 4 வாரங்கள் அவகாசம் கோரியுள்ள மாநில தேர்தல் ஆணையம், பெரும்பாலும் டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலுக்கான அடிப்படை பணிகளை அதிமுக தொடங்கிவிட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதகுறித்து அதிமுக நிர்வாகிகள் கூறியதாவது:

திமுக கூட்டணியிடம் இருந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளை கைப்பற்றியது தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் மக்கள் மத்தியில் அதிமுகவுக்கான செல்வாக்கு எப்போதும்போல் உள்ளது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலின்போது கட்சிக்குள் சில எதிர்ப்புகள் எழுந்தபோதும் முதல்வரும் துணை முதல்வரும் அதை சமாளித்து பாமகவை கூட்டணியில் சேர்த்தனர்.

அதன்பலனாக விக்கிரவாண்டி தற்போது அதிமுக வசமாகியுள்ளது. இதனால், கூட்டணி விஷயத்தில் கட்சித் தலைமை மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. இதே உற்சாகத்துடன் உள்ளாட்சித் தேர்தலையும் சந்திக்க வேண்டும் என்பதே கட்சித் தலைமையின் முடிவாக உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளும் நடந்து வருகின்றன.

ஏற்கெனவே அதிமுக சார்பில் உள்ளாட்சி பிரதிநிதிகளாக இருந் தவர்களின் பட்டியல் தயாரிக்கப் பட்டுள்ளது. அதை வைத்து வேட் பாளர் தேர்வுக்கான பூர்வாங்க பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. எப்போது வேண்டுமானாலும் உள் ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட லாம் என்பதால், சீட் வாங்கு வதற்காக சம்பந்தப்பட்ட மாவட்ட அமைச்சர்கள், மாவட்டச் செயலா ளர்களை அதிமுகவினர் அணுகி வருகின்றனர்.

மக்களவைத் தேர்தலிலும், சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் புதியவர்கள் நிறுத்தப்பட்டனர். அதேபோல், உள்ளாட்சித் தேர்தலி லும் புதியவர்களுக்கு கணிசமாக வாய்ப்பு வழங்க வேண்டும் என்றே தலைமையிடம் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர்.

          
SCROLL FOR NEXT