ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிக்கித்தவிக்கும் சிறுவன் சுஜித் வில்சனுக்காக பிரார்த்திப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், மீட்புப் பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும் விசாரித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில், "துணிச்சல்மிகு குழந்தை சுஜித் வில்சனுக்காக நான் பிரார்த்திக்கிறேன்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் குழந்தை மீட்புப் பணிகள் குறித்து விசாரித்தேன். குழந்தை சுஜித் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" எனப் பதிவிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பிரிட்டோ. இவருடைய மனைவி கலாமேரி. இவர்களுடைய மகன்கள் புனித் ரோசன் (வயது 4), சுஜித் வில்சன் (வயது 2). கடந்த 25-ம் தேதி மாலை 5.40 மணி அளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துவிட்டான். அன்று தொடங்கிய மீட்புப் பனி இந்த நிமிடம் வரை முழுவீச்சில் நடந்துவருகிறது.
தற்போது சுஜித் இருக்கும் கிணற்றுக்கு அருகே தோண்டப்பட்ட குழியில் போர்வெல் மூலம் 3 துளைகள் இடப்பட்டுவருகின்றன. குறிப்பிட்ட ஆழத்திற்குப் பின்னர் அக்குழியில் மீண்டும் ரிக் இயந்திரம் மூலம் தோண்டும் பணி நடைபெறவிருக்கிறது. பின்னர் பக்கவாட்டில் குழி தோண்டி குழந்தையை மீட்பதே திட்டம்.