தமிழகம்

பயன்பாடில்லாத ஆழ்துளை கிணறுகளை மூடாவிட்டால் குற்றவியல் வழக்கு பதிவு: மதுரை மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை

பயன்பாடில்லாத ஆழ்துளை கிணறுகளை மூடாதவர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்படும் என்று மதுரை மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன் எச்சரித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மனப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க தேசிய, மாநில பேரிடர் மேலாண்மை மீட்புக்குழுவினர் தொடர்ந்து கடும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.

ஆனால், ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைகளை மீட்க சரியான அறிவியல் தொழில்நுட்பம் இல்லாததால் தற்போது அந்த குழந்தையை மீட்க முடியவில்லை.

அதனால், தமிழக அரசு தற்போது பயன்பாடில்லாத ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் மதுரை மாநகராட்சியில் அந்தந்த வார்டில் மாநகராட்சிப் பணியாளர்கள் மூடப்படாத ஆழ்துளை கிணறுகளை கணக்கெடுத்து அவற்றை மூடி வருகின்றனர்.

அதுபோல், பொதுமக்களும் தற்போது மூடப்படாத ஆபத்தான ஆழ்துளைக் கிணறுகளை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து பேஸ்புக், வாட்ஸ்ப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதனால், அதிகாரிகளுக்கு தற்போது மூடப்படாத ஆழ்துளை கிணறுகளால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன் கூறுகையில், "தமிழ்நாடு ஆழ்துளை கிணறுகள் ஒழுங்காற்று விதி 2015-ன்படி அனுமதியின்றி ஆழ்துளை கிணறுகள் அமைப்பதும், கைவிடப்பட்ட கிணறுகளைப் பாதுகாப்பாக மூடாமல் இருப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

மதுரை மாநகராட்சி பகுதியில் கைவிடப்பட்ட, பராமரிப்பில்லாத ஆழ்துளை கிணறுகள், மூடப்படாத திறந்த வெளியில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள உறைகிணறுகள், ஆழ்துளை கிணறுகள் ஆகியவற்றை நில உரிமையாளர்கள் அல்லது கிணறு அமைத்த சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக மூட வேண்டும். தவறுபவர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க நேரிடும்.

இனி எதிர்காலத்தில் அனுமதியின்றி போர்வெல் மற்றும் உறைகிணறுகள் அமைப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

SCROLL FOR NEXT