தமிழகம்

மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடக்கம்: பக்தர்கள் திரளாக பங்கேற்பு

செய்திப்பிரிவு

மதுரை

மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (அக்.28) கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

தமிழ் கடவுள் முருகனின் ஆறு படைவீடுகளில் முதல் படைவீடு மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.
கோயிலில் இன்று காலை கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

இன்று முதல் 6 நாட்கள் நடைபெறும் விழாவில் சுப்ரமணிய சுவாமி - தெய்வானையுடன் காலை - மாலை முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர். முக்கிய நிகழ்வான வரும் நம்பர் 3-ம் தேதியன்று சூரசம்ஹாரம் நடைபெறும்.

திருவிழாவின் முதல் நாளான இன்று 28-ம் தேதி (திங்கள்கிழமை) காலை 9.30 மணியளவில் கோயிலுக்குள் உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் எழுந்தருளும் சுப்பிரமணிய சாமிக்கும் சண்முகர் சன்னதியில் எழுந்தருளும் தெய்வானை மற்றும் வள்ளியுடன் சமேத சண்முகப் பெருமானுக்குமாக காப்புக்கட்டுதல் நடந்தது.

இதனையடுத்து பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாக ஒரு வேளைக்கு பால், மிளகு ,துளசி, ஆகியவை மட்டும் உண்டு கடும் விரதம் கடைபிடிக்க உள்ளனர்

கடும் விரதமிருக்கும் பக்தர்கள் ஆறு நாட்களும் கோவிலிலேயே தங்கி இருந்து காலையிலும் மாலையிலுமாக இருவேளை சரவணப் பொய்கையில் நீராடி உடலில் ஈரத் துணியை கட்டியபடி கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்

திருவிழாவையொட்டி கோயிலுக்குள் தினமும் ( 6 நாட்கள் ) காலையில் பதினொரு மணியளவிலும், மாலையில் ஐந்து மணியளவிலுமாக சண்முகார்ச்சனை நடைபெறும்.

இதேபோல தினமும் இரவு 7 மணி அளவில் உற்சவர் சன்னதியிலிருந்து தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டு திருவாட்சி மண்டபத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

எஸ்.சீனிவாசகன்

SCROLL FOR NEXT