நடுக்காட்டுப்பட்டி
குழந்தை சுஜித் விழுந்த ஆழ்துளை கிணற்றுக்கு அருகே தோண்டப்பட்ட குழியில் ரிக் இயந்திரத்துக்குப் பதில் போர்வெல் இயந்திரம் மூலம் தோண்டும் பணி தொடங்கி நடைபெற்றுவருகிறது.
போர்வெல் இயந்திரத்தால் துளையிடப்பட்ட பின்னர் ரிக் இயந்திரத்தைக் கொண்டு குழி அகலப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்கும் பணி 67 மணி நேரத்தைக் கடந்து நடைபெற்று வருகிறது.
முதலாவதாக இத்தாலியில் இருந்து கொண்டுவரப்பட்ட ரிக் இயந்திரம் மூலம் துளையிடப்பட்டது. அது பழுதானதால் 2-வதாக ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட ரிக் இயந்திரம் குழி தோண்டப்பட்டது. 45 அடிவரை குழி தோண்டப்பட்ட நிலையில் 2-வது இயந்திரமும் பழுதனாது.
இந்நிலையில், ஏற்கெனவெ தோண்டப்பட்ட குழிக்குள் 6 இன்ச் அளவுக்கு போர்வெல் இயந்திரம் மூலம் ட்ரில் செய்யப்படுகிறது. இந்த போர்வெல் இயந்திரம் 1200 குதிரை திறன் கொண்டது.
அதற்கு முன்னதாக புதிதாக தோண்டப்பட்ட குழிக்குள் தீயணைப்பு வீரர் ஒருவர் ஏணியின் உதவியிடன் உள்ளே இறக்கப்பட்டார். அவர் பாறையின் தன்மையைக் கண்டறிந்து வந்து சொன்னார்.
தற்போது கடினமான பாறைகள் போர்வெல் இயந்திரம் மூலம் துளையிடப்படுகிறது. இந்த போர்வெல் 1 மணி நேரத்தில் 100 அடி வரை தோண்ட முடியும் எனக் கூறப்படுகிறது. இந்த போர்வெல் கம்ப்ரஸர் இயந்திரம் மூலம் இயங்கக்கூடியது. 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த போர்வெல்லை இயக்கி வருகிறார்கள்.
மீட்புப் பணியை, தொடர்ந்து அமைச்சர்கள் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். போர்வெல் இயந்திரம் மூலம் துளையிடும்போது குழந்தை சுஜித் இருக்கும் ஆழ்துளை கிணற்றுக்குள் மண் சரிவு ஏதும் ஏற்படுகிறதா என்பதும் கண்காணிக்கப்படுகிறது.