சென்னை
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் 5 டாக்டர்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் ஊதியம் வழங்க வேண்டும். நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2 மாதங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும்அரசு டாக்டர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தமிழக அரசு சார்பில்நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 6 வாரத்தில் கோரிக்கைகளைநிறைவேற்றுவதாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உறுதி அளித்தார். ஆனால், உறுதி அளித்தபடி கோரிக்கைகளை அமைச்சர் நிறைவேற்றாததால், மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தமிழ்நாடு அரசு டாக்டர்கள் கூட்டமைப்பு கடந்த வாரம் அறிவித்தது. அதன்படி, நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் போராட்டத்தை தொடங்கினர்.
முதல்வர் தலையிட்டு கோரிக்கையை நிறைவேற்றக் கோரி சென்னை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் டாக்டர்கள் பெருமாள் பிள்ளை, சுரேஷ், ரமா, பாலாமணி, மீர் அலி ஆகிய 5 பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். 2-வது நாளாக நேற்றும் போராட்டம் நீடித்தது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதலைவர் திருமாவளவன், இந்தியகம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா, தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் விஷ்ணுபிரசாத் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்களை சந்தித்து பேசினர்.
தமிழகம் முழுவதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு டாக்டர்கள் பணிக்குச் செல்லாததால், அரசுமருத்துவமனைகளில் லட்சக்கணக்கான புறநோயாளிகள், உள்நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த அறுவை சிகிச்சைகள் நடைபெறவில்லை. காய்ச்சல் பிரிவு, அவசர மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் மட்டும் கையெழுத்துப் போடாமல் கருப்பு பேட்ஜ் அணிந்து டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். நோயாளிகள் பாதிக்கப்படுவதை தவிர்க்கமருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பயிற்சி டாக்டர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக டாக்டர்களிடம் கேட்டபோது, “கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்த அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எங்களை ஏமாற்றிவிட்டார். அதனால்தான், நாங்கள் மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்துக்குச் சென்றோம்.
டெங்கு காய்ச்சலை காரணம்காட்டி போராட்டத்தை கைவிடுமாறு எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய சுகாதாரத் துறைசெயலாளர் பீலா ராஜேஷின்வேண்டுகோளை நிராகரித்துவிட்டோம். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என அவரிடம் தெரிவித்துவிட்டோம்” என்றனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவமனைக்கு வந்த பீலாராஜேஷிடம் இதுபற்றி கேட்டதற்கு, “டாக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினேன். ஆனால், போராட்டத்தை அவர்கள் கைவிடவில்லை. பெரும்பாலான மருத்துவர்கள் பணியில் உள்ளனர். மருத்துவப்பட்டமேற்படிப்பு மாணவர்கள், பயிற்சி டாக்டர்கள் பணியாற்றுகின்றனர். அரசு மருத்துவமனைகளில் பாதிப்பு இல்லை” என்றார்.