சென்னை
நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கான நலத்திட்ட உதவிகள் உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், முதல்வர் பழனிசாமி உத்தரவின் பேரில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டுப்புற கலைஞர்களின் 2 பெண் வாரிசுகளுக்கு 10-ம் வகுப்பு அல்லது பிளஸ் 1பயிலும் நிலையில் ரூ.1,000, பிளஸ் 2 பயின்றால் ரூ.1,500-ம் வழங்கப்படும். பட்டப்படிப்பில் இரு பாலருக்கும் ரூ.1,500 வழங்கப்படும். விடுதியில் தங்கி பயில்பவருக்கு ரூ.1,750-ம் முறையான முதுகலை பட்டயப்படிப்புக்கு ரூ.4 ஆயிரமும் விடுதியில் தங்கியிருந்தால் ரூ.5 ஆயிரமும் தொழில்நுட்ப படிப்பு ரூ.4 ஆயிரமும் விடுதியில் தங்கி தொழிற்படிப்பு, முதுநிலை தொழில் படிப்பு படித்தால் ரூ.6 ஆயிரமும் வழங்கப்படும். விடுதியில் தங்கி முதுநிலை தொழிற்படிப்பு படித்தால் ரூ.8 ஆயிரமும்பாலிடெக்னிக், ஐடிஐ பயில்பவர்களுக்கு ரூபாய் ஆயிரமும் விடுதியில் தங்கி படித்தால் ரூ.1,200-ம் வழங்கப்படும்.
திருமண நிதியுதவியாக உறுப்பினரின் மகன், மகள் ஆகியோருக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். பெண் உறுப்பினர்களின் மகப்பேறு நிதியுதவியாக ரூ.6 ஆயிரம்,கருச்சிதைவு அல்லது கருக்கலைப்பு என இரு முறைக்கு மட்டும் ரூ. 3 ஆயிரம், மூக்கு கண்ணாடிவாங்க 3 ஆண்டுகளுக்கு ஒருமுறைரூ.1500, இயற்கை மரணத்துக்கான உதவித்தொகை ரூ.20 ஆயிரம், ஈமச்சடங்குக்கு ரூ.5 ஆயிரம், விபத்து மரண உதவித்தொகை ரூ.1 லட்சம் என வழங்கப்படும்.
இந்த நலத்திட்ட உதவிகள் பெற உறுப்பினர் பதிவை புதுப்பித்துக் கொள்ளவும் இதுவரை உறுப்பினர்களாக பதிவு செய்யாத கலைஞர்கள் பதிவு செய்யவும் மண்டலக் கலை பண்பாட்டு மையங்களின் உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.