தமிழகம்

மெட்ரோ ரயில்களில் 2 நாளில் 3 லட்சம் பேர் பயணம்: 50% கட்டண சலுகை இன்றுமுதல் அமல்

செய்திப்பிரிவு

சென்னை

தீபாவளியையொட்டி பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று கருதிய மக்கள்,மெட்ரோ ரயில்களில் அதிக அளவில் பயணம் செய்தனர். இதனால் கடந்த 2 நாட்களில் 3 லட்சம் பேர் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

தீபாவளியை முன்னிட்டு கடந்த 2 நாட்களாக சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர். இதற்கிடையே, கோயம்பேடு, சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு செல்லும் ஏராளமான மக்கள் மெட்ரா ரயில்களில் பயணம் செய்தனர். குறிப்பாக, வாகன நெரிசல் அதிகமாக இருக்கும் ஜிஎஸ்டி, அண்ணாசாலை வழியாக வாகனங்களில் செல்வதைத் தவிர்த்து, மெட்ரோ ரயில்களில் அதிக அளவில் மக்கள் பயணம் செய்தனர். கடந்த 24-ம் தேதியில் 1,39,324 பேரும், 25-ம் தேதியில் 1,64,913 பேர் என மொத்தம் 3 லட்சத்து 4 ஆயிரத்து 324 பேர் பயணம் செய்துள்ளனர்.

இதுதொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘தீபாவளியையொட்டி மெட்ரோ ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே, அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் பொதுவிடுமுறை நாட்களில் 50 சதவீத கட்டண சலுகை இன்று (அக்.27) முதல் அமலாகிறது. இந்தச் சலுகையால் மெட்ரோ ரயிலில் மக்கள் அதிக அளவில் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.

SCROLL FOR NEXT