சென்னை
மது போதையில், அதிக வேகத்தில் சென்ற மோட்டார் சைக்கிள்கள் எதிரில் வந்த கார் மீது மோத சம்பவ இடத்திலேயே மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் உயிரிழந்தார். உடன் வந்தவரும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்றவரும் படுகாயமடைந்தனர்.
நேற்றிரவு 12.30 மணி அளவில் சாந்தோம் வழியாக வந்த கார் ஒன்று அடையாறு நோக்கிச் சென்றது. சாந்தோம் சர்ச், குயில் தோட்டத்தைத் தாண்டி சாந்தோம் பள்ளி அருகே கார் சென்றபோது எதிரில் வேகமாக வந்த 2 மோட்டார் சைக்கிள்கள் கார் மீது மோதின.
இதில் மந்தைவெளியைச் சேர்ந்த கணபதி (32) தலை மற்றும் கையில் பலத்த அடிபட்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் வந்த ஒக்கியம் துரைப்பாக்கத்தைச் சேர்ந்த சரண்ராஜ் (25) என்பவரின் கால் முறிந்தது. இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்த ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த சீமான் (25) என்பவரின் வலது கால் தொடையில் முறிவு ஏற்பட்டது.
சரண்ராஜ் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த சீமான் என்பவர் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மது போதையில் வேகமாக வந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரை ஓட்டிவந்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.விபத்து குறித்து சாஸ்திரி நகர் போக்குவரத்துப் புலனாய்வு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.