உதயநிதி - சுஜித்தை மீட்கும் பணி 
தமிழகம்

சுஜித் மீட்பில் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டியது நம் கடமை: உதயநிதி

செய்திப்பிரிவு

சென்னை

சுஜித்தை மீட்கும் பணியில் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டியது மக்களாகிய நம் கடமை என, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 26 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் நேற்று மாலை தவறி விழுந்த 2 வயதுக் குழந்தை சுஜித்தை உயிருடன் மீட்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தகவல் அறிந்து மாநில அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், என்.நடராஜன், எஸ்.வளர்மதி, மணப்பாறை எம்எல்ஏ சந்திரசேகர், மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, எஸ்பி ஜியாவுல் ஹக் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தி வருகின்றனர்.

குழந்தையை மீட்க பிரத்யேகக் கருவியைக் கண்டுபிடித்த மணிகண்டன் தலைமையிலான குழு, மாநிலப் பேரிடர் மீட்புக்குழு, தேசியப் பேரிடர் மீட்புக்குழு என 8 குழுக்கள் இணைந்து குழந்தை சுஜித்தை மீட்க முயற்சி செய்து வருகின்றன.

இந்நிலையில், திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "குழந்தை சுஜித்தின் மனநிலை எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. அவன் நலமுடன் மீட்கப்பட வேண்டும். கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் அனைத்தும் கண்டறியப்பட்டு அவை மூடப்பட வேண்டும். இந்தப் பணியில் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டியது மக்களாகிய நம் கடமை," எனப் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT