இரா.முத்தரசன்: கோப்புப்படம் 
தமிழகம்

ஆழ்துளைக் கிணற்றில் சுஜித்: நிபுணர் மணிகண்டனை அரசு ஊக்குவிக்க வேண்டும்; இரா.முத்தரசன்

செய்திப்பிரிவு

சென்னை

நிபுணர் மணிகண்டன் கண்டறிந்துள்ள கருவி குறித்து ஆய்வு செய்து அதனைப் பரவலாக்க அரசு முன்வர வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இரா.முத்தரசன் இன்று (அக்.26) வெளியிட்ட அறிக்கையில், "விவசாயிகள், நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார், தங்களின் தண்ணீர் தேவைக்காக ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணிகளை மேற்கொள்கின்றனர். அவர்களது முயற்சியில் தண்ணீர் கிடைக்கவில்லை என்ற நிலை ஏற்பட்டால் தோண்டப்பட்ட கிணறுகளை முழுமையாக மூடாமல் விட்டு விடுவது தொடர்கின்றது.

தண்ணீர் கிடைக்கும் என்கிற நம்பிக்கையோடு பெரும் செலவு செய்து தண்ணீர் இல்லை என்ற நிலையில் அதனை முழுமையாக மூடுவதற்கு பெரும் தொகையினை மீண்டும் செலவு செய்திட இயலாத நிலையில் முழுமையாக மூடாமல் அரையும், குறையுமாக மூடப்பட்டு பெரும் ஆபத்து, குறிப்பாக குழந்தைகளின் உயிருக்கே ஆபத்து என்ற நிலை தொடர்கின்றது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டிபட்டி கிராமத்தில் உள்ள கட்டிடத் தொழிலாளி பிரிட்டோ, அவரது மனைவி கலாமேரி இவர்களின் இரண்டு வயதுக் குழந்தை சுஜித் வில்சன், ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியிருப்பது மிகுந்த கவலை அளிக்கின்றது. நேற்று மாலை முதல் மீட்புப் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை என அனைத்து அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரும் குழந்தையை மீட்கப் போராடி வருகின்றனர்.

மேலும் இதுபோன்று ஆழ்துளைக் கிணறுகளில் சிக்கிக் கொள்ளும் குழந்தைகளை மீட்க மதுரையைச் சேர்ந்த நிபுணர் மணிகண்டன் கருவி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார். அவரும் வரவழைக்கப்பட்டார்.

ஆழ்துளைக் கிணறுகள் தோண்டுபவர்கள் யாராக இருப்பினும் அதனை முழுமையாக மூட வேண்டும் என்பதுடன், பாதியில் விடப்படுவதற்கான காரணத்தை அறிந்து அரசு அவர்களுக்கு உதவி செய்திட முன்வர வேண்டும்.

மேலும் நிபுணர் மணிகண்டன் கண்டறிந்துள்ள கருவி குறித்து ஆய்வு செய்து, பரவலாக்கவும் மணிகண்டன் போன்றவர்களை ஊக்குவித்து, பல நிபுணர்களை உருவாக்கவும் அரசு முன்வர வேண்டும்," என இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT