சென்னை
சிறுவன் சுஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 26 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் நேற்று மாலை தவறி விழுந்த 2 வயதுக் குழந்தை சுஜித்தை உயிருடன் மீட்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தகவல் அறிந்து மாநில அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், என்.நடராஜன், எஸ்.வளர்மதி, மணப்பாறை எம்எல்ஏ சந்திரசேகர், மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, எஸ்பி ஜியாவுல் ஹக் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தி வருகின்றனர்.
குழந்தையை மீட்க பிரத்யேகக் கருவியைக் கண்டுபிடித்த மணிகண்டன் தலைமையிலான குழு, மாநிலப் பேரிடர் மீட்புக்குழு, தேசியப் பேரிடர் மீட்புக்குழு என 8 குழுக்கள் இணைந்து குழந்தை சுஜித்தை மீட்க முயற்சி செய்து வருகின்றன.
இந்நிலையில், டிடிவி தினகரன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "திருச்சி மணப்பாறை அருகே ஆழ்துளைக் குழியில் சிறுவன் சுஜித் தவறி விழுந்த நிகழ்வு மனம் பதைக்கச் செய்கிறது. சிறுவன் சுஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்" எனப் பதிவிட்டுள்ளார்.