தமிழகம்

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க நடவடிக்கை:  சென்னையைச் சேர்ந்த 6வது குழு முயற்சி

செய்திப்பிரிவு

மணப்பாறை
மணப்பாறை அருகே 26 அடி ஆழ் ஆழ்துளைக் கிணற்றில் நேற்று மாலை தவறி விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் நடவடிக்கையில் 5 குழுக்களின் முயற்சி வெற்றி பெறாத நிலையில் சென்னையைச் சேர்ந்த 6-வது குழு தற்போது மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது.

மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த தம்பதி பிரிட்டோ ஆரோக்கியராஜ்- கலாராணி. இவர்களது மகன் சுஜித் வில்சன் (2). பிரிட்டோ ஆரோக்கியராஜ் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகில் உள்ள வயலில் பாசனத்துக்காக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் ஆழ்துளைக் கிணறு தோண்டியுள்ளார். ஆனால், தண்ணீர் கிடைக்காததால் அந்த ஆழ்துளைக் கிணற்றை மூடிவிட்டார். கைவிடப்பட்ட அந்த ஆழ்துளைக் கிணற்றைச் சுற்றி தற்போது மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக பெய்த மழையில் ஆழ்துளைக் கிணற்றில் மூடியிருந்த மண் உள்வாங்கியது. அது தெரியாமல் அந்தப் பகுதியில் நேற்று மாலை 5.30 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்த சுஜித் வில்சன் எதிர்பாராதவிதமாக ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தார்.

ஆழ்குழாய் குழியில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வரும் பிரத்யேக குழுவினர் சேலம், மதுரை, நாமக்கல் ஆகிய இடங்களில் இருந்து மீட்பு குழுவினர் வந்தனர். முதலில் நாமக்கல்லைச் சேர்ந்த குழுவினர் முயன்றனர். ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தகளை மீட்பற்காக மணிகண்டன் கண்டுபிடித்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

கயிறு மூலம் கட்டி இழுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கயிறு மூலம் சுருக்கு போட்டு இழுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் 2 வயது குழந்தை என்பதால் கயிறு சுழுக்கு மூலம் இழுக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனிடையே 28 அடியில் இருந்த குழந்தை மீண்டும் ஆழத்துக்கு சென்றது. ஏறக்குறைய 70 அடிகள் ஆழத்துக்கு சென்றதாக தெரிகிறது.

இதையடுத்து சேலம் மற்றும் கோவையைச் சேர்ந்த குழுவினர் கண்டுபிடித்த குழாய் போன்ற கருவி மூலம் மீட்க முயற்சி எடுக்கப்பட்டது. அதுபோலவே அருகே குழி தோண்டி அதன் மூலம் இரும்பு கம்பியை கொடுத்து குழந்தையை தூக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பக்கவாட்டில் பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டியபோது சுமார் 12 அடி ஆழத்தில் பாறை குறுக்கிட்டதால் பிரத்யேக கருவிகள் மூலம் அதை உடைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. குழந்தை பயந்துவிடாமல் இருப்பதற்காக அவரது பெற்றோரும், உறவினர்களும் ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் இருந்தவாறு பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்தனர். ஆனால் பெரும் சத்தம் கேட்டதால் அது குழந்தையின் மன உறுதியை பாதிக்கும் என்பதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பலூன் போன்ற கருவியை உள்ளே இறக்கி குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. குழந்தை சுஜித்தை மீட்க 5 வெவ்வேறு தனிநபர்கள் தாங்கள் கண்டறிந்த கருவிகள் மூலம் முயன்ற நிலையில் அது வெற்றி பெறவில்லை. இந்தநிலையில் சென்னையைச் சேர்ந்த 6-வது குழுவும் குழந்தையை மீட்க தற்போது முயற்சி மேற்கொண்டுள்ளது.

SCROLL FOR NEXT