தமிழகம்

புகழேந்தி ஒரு 24-ம் புலிகேசி: சசிகலாவை சந்தித்த பின் தினகரன் கிண்டல்

செய்திப்பிரிவு

பெங்களூரு

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள அமமுக பொதுச் செயலாளர் சசிகலா பெங்களூருவில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை அக்கட்சியின் துணை பொதுச் செயலாளரும், உறவினருமான டிடிவி தினகரன் நேற்று சிறையில் சந்தித்து பேசினார். சுமார் 1 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் தமிழக அரசியல் நிலவரம், இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த சந்திப்புக்கு பிறகு டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:எடப்பாடி பழனிசாமியை புகழேந்தி சந்தித்தது ஏற்கெனவே எதிர்ப்பார்த்தது தான். கத்தரிக்காய் முற்றினால் கடைக்கு வந்துதானே ஆக வேண்டும். புகழேந்தி ஒரு 24-ம் புலிகேசி. இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தில் வரும் வடிவேலுவை போன்றவர் அவர். அவரைப் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அவர் அமமுகவில் இருக்கிறாரா அல்லது அதிமுகவில் இருக்கிறாரா என்பதை நான் கூற முடியாது.

சசிகலா சிறை விதிமுறைகளை மீறியதில்லை. ஆனால் சிலர் அவரைப் பற்றி தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். சசிகலா முன்கூட்டியே வெளியே வருவதற்காக சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன். நான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அமமுகவை வளர்க்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT