சென்னை
வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தில் மிகக் குறைந்த அளவாக சென்னை மாவட்டத்தில் இதுவரை 18 சதவீதம் வாக்காளர்களே தங்கள் விவரங்களை சரிபார்த்துள்ளனர். எனவே வாக்காளர்கள் தங்கள் விவரங்களை விரைந்து சரிபார்க்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப் பணிகளுக்கு பதில் இந்த ஆண்டு, ‘வாக்காளர் சரிபார்ப்பு திட்டம்’ என்ற புதிய திட்டம் கடந்த செப்.1-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் வாக்காளர்கள், தங்கள் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக, ‘NVSP’ இணையதளம், கைபேசி செயலி, 1950 என்ற தொலைபேசி எண் மற்றும் வக்காளர்கள் உதவி மையங்களில் தங்கள் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும், பெயர், முகவரி இவற்றில் திருத்தங்கள் இருந்தால் உரிய ஆவணங்கள் அளித்தும், புகைப்படத்தை மாற்ற விரும்பினால் உரிய புகைப்படம் அளித்தும் அவற்றை திருத்திக் கொள்ளலாம். மேலும் கைபேசி எண்ணை பதிவு செய்து வாக்காளர்கள் தங்கள் விவரங்களை சரிபார்த்ததற்கான ஆதாரத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
முதலில் செப்.30 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. அதன்பின், அக்.15-ம் தேதி நீட்டிக்கப்பட்டது. இருப்பினும், தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 99 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில், 5 சதவீதம் வாக்காளர்களே தங்கள் விவரங்களை சரிபார்த்திருந்தனர். இதனால், இத் திட்டத்தை அக்.15 வரை தேர்தல் ஆணையம் மேலும் நீட்டித்தது. அப்போதும் குறைந்த அளவே வாக்காளர்கள் சரிபார்த்தல் திட்டத்தை பயன்படுத்தினர். இதனால், நவம்பர் 18-ம் தேதி வரை தற்போது நீட்டித்துள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 25-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறியதாவது:வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அக்.22-ம் தேதி நிலவரப்படி, 61.87 சதவீதம் வாக்காளர்கள் அதாவது 5 கோடியே 99 லட்சத்து 90 ஆயிரத்து 913 வாக்காளர்களில், 3 கோடியே 71 லட்சத்து 16 ஆயிரத்து 464 வாக்காளர்கள் தங்கள் விவரங்களை சரிபார்த்துள்ளனர்.
குறிப்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் அனைத்து வாக்காளர்களும் தங்கள் விவரங்களை சரிபார்த்துள்ளனர். அரியலூர் - 98, ஈரோடு - 92, கரூர் - 89 சதவீதம் என 15 மாவட்டங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் விவரங்களை சரிபார்த்துள்ளனர்.
சென்னையில் மொத்தம் உள்ள 38 லட்சத்து 81 ஆயிரத்து 870 வாக்காளர்களில் 7 லட்சத்து 19 ஆயிரத்து 202 பேர் மட்டுமே சரிபார்த்துள்ளனர். இது மிகக் குறைந்த (18.53) சதவீதமாகும். இதற்கு அடுத்து, மதுரை 46 சதவீதமாக உள்ளது. பொதுமக்கள் தங்கள் விவரங்களை சரிபார்ப்பதுடன் கைபேசி எண்ணை அளித்தால், எதிர்காலத்தில் அவர்களுக்கு ஆணையத்தின் முக்கிய தகவல்கள் குறுஞ்செய்தி மூலம் அனுப்ப ஏதுவாக இருக்கும்.
பெரம்பலூரில் 100 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டதற்கு, அங்குள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களான அங்கன்வாடி ஊழியர்களின் பணியும் முக்கிய காரணம். அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் நேரடியாகச் சென்று விவரங்களை பெற்று சேர்த்துள்ளனர்.
அதேநேரம் சென்னையில், பெரும்பாலான வீடுகளில் கணவன் - மனைவி இருவரும் பணிக்குச் சென்றுவிடுவதும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் விவரங்களை கொடுக்க மக்கள் விரும்பாததுமே இதற்குக் காரணம் எனத் தெரிகிறது. நகர்ப்புற மக்களைவிட ஊரகப் பகுதிகளில் வாக்காளர்கள் அதிக விழிப்புடன் இருக்கின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.