சென்னை
தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக, சென்னையில் இருந்து பேருந்து, ரயில்களில் பல்லாயிரம் மக்கள் வெளி மாவட்டங்களுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 6 லட்சத்துக்கும் அதிக மானோர் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு புறப்பட்டுச் சென் றுள்ளனர். இதனால், பேருந்து, ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. சென்னை யில் வசிக்கும் வெளி மாவட்டத்தினர் தீபாவளிக்காக சொந்த ஊர் புறப் பட்டுச் சென்றவண்ணம் உள்ளனர். சென்னையில் இருந்து கடந்த 24-ம் தேதி சுமார் 1 லட்சம் பேர் வெளி யூர்களுக்கு புறப்பட்டு சென்ற நிலையில், 2-வது நாளான நேற்றும் ரயில்கள், அரசு மற்றும் ஆம்னி பேருந்துகளில் அதிக அளவில் புறப்பட்டுச் சென்றனர்.
அமைச்சர் ஆய்வு
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக கூடுதல் நடைமேடைகள் அமைக்கப் பட்டுள்ளன. அங்கு பேருந்துகள் வரிசையாக நிறுத்தப்பட்டு பயணி களை ஏற்றிச் செல்கின்றன. கோயம் பேடு பேருந்து நிலையத்தில் போக்கு வரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். மக்கள் சிரமமின்றி பயணம் செய்வதற்கேற்ப பேருந்துகளை இயக்குமாறு போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடமும், பேருந்துகளை பாதுகாப்பாக ஓட்டிச் செல்லுமாறு ஓட்டுநர்களிடமும் அமைச்சர் அறிவுறுத்தினார்.
கோயம்பேடு தவிர, தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், தாம்பரம் சானடோரியம், மாதவரம், பூவிருந்தவல்லி, கே.கே.நகர் பேருந்து நிலையங்களில் இருந்தும் தீபாவளி சிறப்பு பேருந்துகள் 2-வது நாளாக நேற்று இயக்கப்பட்டன. 1,763 சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தம் 3,988 பேருந்துகள் இயக்கப்பட்டன.
அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தீபாவளியை முன்னிட்டு தேவை யான அளவுக்கு சிறப்பு பேருந்து களை இயக்கி வருகிறோம். பேருந்து இயக்கம் குறித்து பயணிகளுக்கு தகவல்கள் அளிக் கும் வகையில் உதவி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. உரிய இடங் களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வரு கிறோம். சென்னையில் இருந்து இன்று (25-ம் தேதி) அதிகாலை முதல் நள்ளிரவு வரை சுமார் 3.5 லட்சம் பேர் புறப்பட்டு சென்றுள்ளனர். 26-ம் தேதியும் (இன்று) அதிக அளவில் மக்கள் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.
ரயில் நிலையங்களில் கூட்டம்
சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங் களில் இருந்து வழக்கமாக செல் லும் விரைவு ரயில்களுடன் 7 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. வழக்கமான விரைவு ரயில்களில் உள்ள முன்பதிவு செய்யப்படாத பொது பெட்டிகள் மற்றும் முன்பதிவு இல்லாத அந்த்யோதயா விரைவு ரயில்களில் இடம் பிடிக்க பயணிகள் கூட்டம் அலைமோதியது. ரயில் பெட்டிகளில் உட்கார இடம் இல்லாத வர்கள் நின்றுகொண்டு பயணம் செய்தனர்.
ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘வழக்கமாக இயக்கப்படும் விரைவு ரயில்களில் கூட்டம் அலை மோதியது. வாய்ப்பு உள்ள சில விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டி களை இணைத்து இயக்கினோம். தீபாவளியை முன்னிட்டு 7 சிறப்பு ரயில்களை இயக்கினோம். முன் பதிவு இல்லாத பெட்டிகளில் கடும் கூட்ட நெரிசல் இருந்தது. சென்னை யில் இருந்து வெளி மாவட்டங் களுக்கு ரயில்களில் 2 லட்சத்துக் கும் மேற்பட்டோர் பயணம் செய்திருப்பார்கள்’’ என்றனர்.
இதுதவிர, ஆம்னி பேருந்துகள், சுற்றுலா வாகனங்கள், வேன், கார் என நேற்று ஒரே நாளில் 6 லட்சத் துக்கும் அதிகமானோர் சென்னை யில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
பேருந்து, ரயிலைப் பிடிப்பதற் காக கோயம்பேடு, சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு குடும்பத்தோடு சென்ற பலரும் மெட்ரோ ரயில்களை பயன்படுத்தி னர். இதனால், மெட்ரோ ரயில் கள், ரயில் நிலையங்களில் வழக் கத்தைவிட கூட்டம் அதிகம் இருந் தது. மாலைக்கு பிறகு, நேரம் ஆக ஆக அனைத்து இடங்களி லும் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கி யதால், முக்கிய பேருந்து, ரயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இன்று 3,735 பேருந்துகள்
தொலைதூரம் செல்பவர்கள் பெரும்பாலும் நேற்றே புறப்பட்டுச் சென்றனர். கடைசி நேரத்தில் புறப்படுபவர்கள், குறைந்த தூரம் வரை செல்பவர்களே இன்று அதிக அளவில் பயணம் செய்வார்கள் என்பதால், அதற்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள் ளன. சென்னையில் இருந்து இன்று 1,510 சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தம் 3,735 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.