மதுரை
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும், 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் இன்று(அக்.25) தீர்மானம் நிறைவேற்றினார்.
திருப்பரங்குன்றத்தில் ஒரு திருமண மண்டபத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
தீர்மானத்தில், "பாரதப் பிரதமரையும், சீன தேசத்து அதிபரையும் தமிழ்நாட்டுக்கு அழைத்து அதன் மூலம் தமிழகத்தின் நாகரிகத்தை உலகறிய செய்திட்ட தமிழினத்தின் பெருமை, வெளிநாட்டு முதலீட்டை தமிழகத்திற்கு கொண்டு வந்து அதன் மூலம் தமிழகத்தின் பொருளாதாரத்தை இந்திய திருநாட்டின் முதமை நிலைக்கு உயர்த்திய பொருளாதார சாணக்கியர் " என்று முதல்வருக்கு புகழாரம் சூட்டப்பட்டது.
தீர்மானம் நிறைவேற்றிய பின்னர் தொடர்ந்து பேசிய அவர், "நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்டாலின் குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவதுபோல் பல்வேறு பொய்ப் பிரச்சாரம் செய்தார். அந்தப் பொய் பிரச்சாரத்திற்கு முடிவுகட்டும் வகையில்தான் இந்த தேர்தல் முடிவு அமைந்துள்ளது.
இந்த இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் இந்தத் தேர்தல் 2021 தேர்தலுக்கு அச்சாரம் ஆகும் என்றார்.
அது மட்டுமல்லாது இந்த இரண்டு இடத்தில் ஜெயித்தால் ஆட்சியைப் பிடிப்போம். அதேபோல் உள்ளாட்சி தேர்தல் நடத்துவோம் என்று கூறினார். மேலும் முதல்வராக கனவு கண்டு ஆணவத்தோடு செயல்பட்டார். ஆனால் இன்றைக்கு மக்கள் சரியான தீர்ப்பு தந்துள்ளார்கள்.
தமிழ்நாட்டின் நலன்தான் முக்கியம் என்று முதல்வர் செயல்பட்டார் அதற்கு நல்ல பரிசை மக்கள் வழங்கியுள்ளனர். வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் இதே போன்ற நல்ல தீர்ப்பினை மக்கள் வழங்குவார்கள்" என்று அவர் பேசினார்.
-எஸ்.ஸ்ரீநிவாசகன்