மதுரை
நீட் ஆள் மாறாட்ட வழக்கில் 4 பேரின் ஜாமீன் மனுக்கள் மற்றும் 2 பேரின் முன்ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்ட பிரவீன், ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அதில், "நீட் தேர்வில் 130 மதிப்பெண் பெற்று தனியார் மருத்துவ கல்லூரியில் சேர்ந்தேன். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக என்னையும், என் தந்தை சரவணனையும் போலீஸார் கைது செய்தனர். என் ஜாமீன் மனுவை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.
பிரவீனின் தந்தை சரவணனும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைதான சென்னையைச் சேர்ந்த டேவிஸ், அவரது மகன் ராகுல் டேவிஸ் ஆகியோரும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.
இதில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக எங்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். புரோக்கர் வேதாச்சலம், ரஷீத் பாய் ஆகியோரை கைது செய்யாமல் எங்களைக் கைது செய்துள்ளனர். ஆள்மாறாட்ட முறைகேட்டில் எங்களுக்குத் தொடர்பு இல்லை. எனவே ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் தலைமை அரசு வழக்கறிஞர் ஆஜராக அவகாசம் கோரப்பட்டது. இதனால் விசாரணையை அக். 30-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இதேபோல் நீட் ஆள்மாறாட்ட வழக்கில் சிபிசிஐடி போலீஸாரால் தேடப்பட்டு வரும் சென்னையைச் சேர்ந்த ரவிகுமார், அவரது மகன் ரஷிக்காந்த் ஆகியோர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணையும் அக்.30-க்கு ஒத்திவைக்கப்பட்டது.