தமிழகம்

ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் சென்னை மெட்ரோ ரயில்களில் 50 சதவீதம் கட்டண சலுகை

செய்திப்பிரிவு

சென்னை

சென்னை மெட்ரோ ரயில்களில் ஞாயிறு மற்றும் பொதுவிடுமுறை நாட்களில் 50 சதவீதம் கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 27-ம் தேதி முதல் இந்த கட்டண சலுகை அளிக்கப்படுகிறது.

சென்னையில் மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை சராசரியாக நாளொன்றுக்கு ஒரு லட்சமாக உள்ளது. இருப்பினும் விடுமுறை நாட்களில் பயணிகளின் கூட்டம் குறைவாக உள்ளது. சில விடுமுறை நாட்களில் சராசரியாக 50 ஆயிரம் மட்டுமே மெட்ரோ ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர்.

ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் கூட்டம் குறைவாக இருப்பது குறித்தும், இந்நாட்களில் பயணிகளை ஈர்ப்பது குறித்தும் மெட்ரோ ரயில் நிர்வாகம் கடந்த மாதம் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. அதில், ஞாயிறு மற்றும் பொதுவிடுமுறை நாட்களில் கட்டணத்தை 50 சதவீதம் குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதற்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ள நிலையில், மெட்ரோ ரயில்களில் ஞாயிறு மற்றும் பொதுவிடுமுறை நாட்களில் 50 சதவீதம் கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னையில் மக்கள் விரைவாகவும், பாதுகாப்பாகவும் பயணம் செய்ய மெட்ரோ ரயில் நிறுவனம் சிறப்பான சேவையை வழங்கி வருகிறது.

இந்நிலையில், பயணிகள் பயன்பெறும் வகையில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் விடுமுறை நாட்களில் 50 சதவீதம் கட்டண சலுகை அளிக்கப்பட உள்ளது. இந்த புதிய கட்டண சலுகை வரும் 27-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த கட்டண சலுகை டிரிப் அட்டை மற்றும் மெட்ரோ ரயில் பயண அட்டைக்கு வழங்கப்படாது. மெட்ரோ ரயில் நிறுவனம் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரையில் இந்த சலுகை கட்டணம் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பயணிகள் வரவேற்பு

இது தொடர்பாக பயணிகள் சிலர் கூறும்போது, ‘‘மெட்ரோ ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வகையில் ஞாயிறு மற்றும் பொதுவிடுமுறை நாட்களில் 50 சதவீத கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த சலுகை மக்களுக்கு தடையின்றி கிடைக்க நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், அண்ணாசாலை போன்ற பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது’’ என்றனர்.

SCROLL FOR NEXT