ஜான்குமார்: கோப்புப்படம் 
தமிழகம்

வாக்காளர்களுக்கும் எதிரணி வேட்பாளருக்கும் நன்றி: புதுச்சேரி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஜான்குமார்

செய்திப்பிரிவு

புதுச்சேரி

காமராஜர் நகர் தொகுதி மக்களுக்கு முதல்கட்டமாக அடிப்படை வசதிகளை செய்து தருவேன் என, அத்தொகுதியில் வெற்றி பெற்ற ஜான்குமார் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி காமராஜர் நகர் சட்டப்பேரவை தொகுதியில் கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பாக ஜான்குமார், என்.ஆர்.காங்கிரஸ் சார்பாக புவனேஸ்வரன், நாம் தமிழர் கட்சி சார்பாக பிரவீணா, மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் சார்பாக வெற்றிச்செல்வன் உட்பட 9 பேர் போட்டியிட்டனர்.

இந்நிலையில், இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (அக்.24) எண்ணப்பட்டன. வாக்குகள் எண்ண ஆரம்பித்து ஒரு மணி நேரத்திலேயே காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் அமோக வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து வைசியால் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், வெற்றிபெற்ற ஜான்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"காமராஜர் நகர் தேர்தலில் வாக்களித்து வெற்றி பெற செய்த அனைத்து மக்களுக்கும் நன்றி. எதிரணி வேட்பாளர் புவனேஸ்வரன் மற்றும் அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் ரங்கசாமிக்கு நன்றி. காமராஜர் நகர் தொகுதி மக்களுக்கு முதல்கட்டமாக அடிப்படை வசதிகளை செய்து தருவேன்," என தெரிவித்தார்.

செ.ஞானபிரகாஷ்

SCROLL FOR NEXT