தஞ்சாவூர்
இடைத்தேர்தலில் ஆளும்கட்சி வெற்றி பெறுவது சகஜமானது என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகளில், இரு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது.
இந்நிலையில், தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், அமமுக ஒருபோதும் துரோகிகளுடன் இணையாது எனத் தெரிவித்தார்.
"இடைத்தேர்தலில் ஆளும்கட்சி ஜெயிக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். இது ஒன்றும் பெரிய வெற்றி இல்லை. ஏனென்றால், 2006-2011 வரை நடைபெற்ற எல்லா இடைத்தேர்தல்களிலும் திமுக வெற்றி பெற்றது. அந்த ஆட்சிக் காலத்தில் கடைசியாக நடைபெற்ற பென்னாகரம் இடைத்தேர்தல் வரை திமுக ஜெயித்தது. 2011-க்குப் பிறகு நிலைமை என்னவானது? நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. மக்கள் எல்லாவற்றையும் நன்றாக கவனித்துக் கொண்டிருக்கின்றனர்" என்று தினகரன் தெரிவித்தார்.
அப்போது, அதிமுகவுடன் அமமுக இணையுமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "அமமுக ஒருபோதும் துரோகிகளுடன் இணையாது" என டிடிவி தினகரன் தெரிவித்தார்.