ந.சரவணன்
வாணியம்பாடி
வேலூர் மாவட்டம் முழுவதும் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், வாணியம்பாடி அரசு மருத்துவ மனையில் மருத்துவர்கள் முழு நேரம் பணியில் இல்லாததால் செவிலியர்களே சிகிச்சை அளிப்ப தாக நோயாளிகள் குற்றஞ்சாட்டி யுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் 900-க்கும் மேற்பட்டோர் டெங்கு வால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனுமதிக் கப்பட்டு வருகின்றனர். சுகாதாரப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ள தால் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், மர்ம காய்ச்ச லால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக் காக வாணியம்பாடி அரசு மருத்துவ மனைக்கு செல்லும் நோயாளிகளை அங்குள்ள செவிலியர்கள், மருத்து வர்கள் இல்லை எனக்கூறி திருப்பி அனுப்பி வைப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வாணியம் பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும்போது, மருத்துவர்கள் இல்லை எனக் கூறி செவிலியர்கள் திருப்பி அனுப்பு கின்றனர்.
காலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை 4 மருத்துவர்கள் பணியில் உள்ளனர். பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4 மணி வரை 3 மருத்துவர்கள் பணியில் உள்ளனர். முழுநேர பணியில் மருத்துவர்கள் இருப்பதில்லை. அதன்பிறகு வரும் நோயாளிகளுக்கு செவிலியர்கள் தான் சிகிச்சை அளிக்கின்றனர். ரத்தப்பரிசோதனை மையத்தில் ஒருவர் மட்டுமே பணியில் இருப்பதால் பரிசோதனைக்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே மருந்தகத்தில் மருந்து, மாத்திரைகள் வழங்கப் படுகின்றன. அங்கு பணியாற்றும் மருந்தாளுநர்கள், நோய்க்கான மருந்து எது, அதை உட்கொள்ளும் முறை குறித்து முறையாக கூறுவது இல்லை. இதுசம்பந்தமாக கேட் டால், அலட்சியமாக பதில் கூறுகின் றனர். அரசு மருத்துவர்கள் சிலர் வாணியம்பாடி, ஆம்பூர், பேரணாம் பட்டு போன்ற பகுதிகளில் தனியாக கிளீனிக் நடத்தி வருகின்றனர்.
அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வருவோரை மேல் சிகிச்சை பெற தங்களது கிளீனிக்கிக்கு வருமாறு அறிவுறுத்துகின்றனர். எனவே, சுகாதாரத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து, வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் மருத்து வர்கள் முழுநேர பணியில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அதை தடுப்பதற்கான வழிமுறைகளை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்த வேண்டும்’’ என்றனர்.
இதுகுறித்து வாணியம்பாடி அரசு மருத்துவமனை தரப்பில் விசாரித்தபோது, ‘‘வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் 13 மருத்துவர்கள் பணியில் உள்ளனர். தினசரி 800-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்து வர்களுக்கு எதிராக ஒரு சிலர் அவதூறு பரப்பி வருகின்றனர். அனைத்து நோயாளிகளுக்கும் முறையாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.