நாங்குநேரி
நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், முதல் சுற்று முடிவை அதிகாரபூர்வமாக அறிவிப்பத்தில் அதிகாரிகள் மெத்தனம் காட்டிவருவதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், முதல் சுற்றின்படி அதிமுக வேட்பாளர் வெ.நாராயணன் முன்னிலை வகிக்கிறார்.
முன்னதாக, காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கவிருந்த நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எண்ணும் பணி 8.35 மணிக்கே தொடங்கியது. இதனால் முதல் சுற்று முடிவு தாமதமாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கிடையில் வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து பத்திரிகை நிருபர்கள் வெளியே சென்றால்தான் ஓட்டு எண்ணிக்கை தொடரும் என டிஎஸ்ஓ கூறினார். உடனே நிருபர்கள் வெளியேறுமாறு மக்கள் தொடர்பு அதிகாரி கூறினார். இதற்கு சுயேச்சை வேட்பாளர்கள், ஏஜெண்டுகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
போலீஸார் பத்திரிகையாளர்களைத் தள்ளி வெளியேற்றினார்கள். இதனால் போலீஸாருக்கும், பத்திரிகையாளருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தால் பரபரப்பான சூழல் நிலவியது.
பின்னர் நாங்குநேரி முதல் சுற்று முடிவு அதிகாரபூர்மாக அறிவிக்கப்பட்டது. அதிமுக வேட்பாளர் வெ.நாராயணன் 4,737 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 2.865 வாக்குகளும் பெற்றுள்ளனர். 1,872 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முன்னிலை வகிக்கிறார்.
நாங்குநேரி தொகுதியில் 6 முறை காங்கிரஸ் கட்சியும், 5 முறை அதிமுகவும், இரண்டு முறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.