புதுச்சேரி
புதுச்சேரி காமராஜ் நகரில் இடைத் தேர்தலின் இறுதி நாளில் ஆளும் காங்கிரஸ், பிரதான எதிர்க் கட்சியான என். ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் இரு சக்கர வாகன பேரணி நடத்தின. அப்போது அதில் வந்த யாரும் ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை.
இவ்விவகாரத்தில் புதுச்சேரி டிஜிபி உத்தரவின் பேரில் காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் தரப்பில் 20க்கும் மேற்பட்டோர் டூவீலரில் ஹெல்மெட் அணியாமல் சென்றது தொடர்பான நோட்டீஸை கோரிமேடு காவல் நிலைய போலீஸார் தயாரித்துள்ளனர்.
இரு தரப்பினர் மீது ஹெல்மெட் அணியாததற்கு ரூ. 100 அபராதம் விதிக்கும் வகையிலான நோட்டீஸை அந்தந்த கட்சி பிரமுகர்களிடம் போலீஸார் அளித்ததற்கு, அவர்கள் அதை வாங்க மறுத்துள்ளனர். 'முதலில், ரோந்து செல்வதாக கூறி, இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் போடாமல் இதற்கு முன் சென்ற ஆளுநர் கிரண்பேடி மீது முதலில் நடவடிக்கை எடுங்கள்' என்று தெரிவித்துள்ளனர்.
முதல்வர், அமைச்சருக்கும் தயாரான நோட்டீஸ்
குறிப்பாக, இந்த இடைத் தேர்தல் வாகனப் பிரச்சாரத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் தலைவர் அமைச்சர் நமச்சிவாயம் மீதும் நோட்டீஸ் தயாராகி உள்ளது.
காவல்துறை வட்டாரங்களில் இதுபற்றி விசாரித்தபோது, 'தேர்தல் பிரச்சார இரு சக்கர வாகன ஊர்வலம் புதுவை நகர் முழுக்க நடந்தது. இதில், ஆளுநர் அறிவுறுத்தலைத் தொடர்ந்து டிஜிபி உத்தரவின் பேரில் ஹெல்மெட் அணியாதோர் மீது நோட்டீஸ் தயாரித்தோம். ஆனால் இதை முதல்வர், அமைச்சரிடம் எப்படி தருவது என்று குழப்பத்தில் இருக்கிறோம். வீடியோ ஆதாரம், புகைப்படம் கொண்டு நோட்டீஸ் தயாரிக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தனர்.
புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாமல் சென்ற விவகாரத்தில், ஆளுநர்- முதல்வர் மாறி, மாறி குற்றச்சாட்டி டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். ஆளுநர், முதல்வர் இடையே நிலவும் இந்தப் பிரச்சினையை எப்படி எதிர் கொள்வது என்று காவல்துறை உயர் அதிகாரிகள் தொடங்கி போக்குவரத்து போலீஸார் வரை குழப்பத்தில் உள்ளனர்.
டிஜிபியிடம் மார்க்சிஸ்ட் மனு
இதற்கிடையே, சாலை பாதுகாப்பு விவகாரத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று புதுச்சேரி டிஜிபி பாலாஜி வத்சாவிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் அதன் நிர்வாக குழு உறுப்பினர் முருகன் நேற்று மனு ஒன்றை அளித்தார்.
அதில், 'தேர்தல் பிரச்சாரத்தில் ஹெல்மெட் அணிவது தேர்தல் விதி முறைக்கு எதிரானது. அரசு ஊழியர் களும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடு வதால், பிரச்சாரத்தில் செல்பவர்கள் யார் என்று தெரியும் வகையில் ஹெல் மெட் அணியக் கூடாது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது, அதே நேரத்தில் இதற்கு முன் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற ஆளுநர் கிரண்பேடி, காரில் சீட் பெல்ட் போடாமல் சென்ற புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் மற்றும் அக்கட்சியின் பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் 2017-ம் ஆண்டில் ஆளுநர் கிரண்பேடி, நள்ளிரவில் ரோந்து வருவதாக இருசக்கர வாகனத்தில் சென்ற போது, ஹெல்மெட் அணியாமல் சென்றது குறிப்பிடத்தக்கது.