தமிழகம்

நாங்குநேரி இடைத்தேர்தல்: மின்னணு இயந்திர வாக்கு எண்ணிக்கையில் தாமதம்; தபால் வாக்குகளில் அதிமுக முன்னிலை

அ.அருள்தாசன்

நாங்குநேரி

நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலின் வாக்கு எண்ணும் பணியில் பின்னடைவு ஏற்பட்டது. காலை 8.35 மணி வரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கப்படவில்லை. இதனால், முதல் சுற்றில் அறிவிப்பதில் காலதாமதமாகும்.

இருப்பினும், தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் அதிமுக வேட்பாளர் வெ.நாராயணன் முன்னிலை வகிக்கிறார்.

நாங்குநேரி தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த எச்.வசந்தகுமார், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு கன்னியாகுமரி மக்களவை எம்.பி.,யாகத் தேர்வானார்.

இதனையடுத்து அத்தொகுதி காலியானது. இதனையடுத்து கடந்த 21-ம் தேதி இத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.

நாங்குநேரி இடைத்தேர்தலில், திமுக கூட்டணில் இடம் பெற்றிருக்கும் காங்கிரஸ் ரூபி மனோகரனை களம் இறக்கியது. அதிமுகவில் இருந்து ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் களம் இறக்கப்பட்டார். நாம் தமிழர் சார்பில் ராஜநாராயணன் களம் கண்டார்.

நாங்குநேரியில் நடைபெற்ற தேர்தலில் 66.10% வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மொத்தம் 22 சுற்றுகளில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதற்காக 14 மேசைகள் போடப்பட்டுள்ளன. தேர்தல் அதிகாரிகள் கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பலத்த போலீஸ் பாதுகாப்பும் செய்யப்பட்டுள்ளது.

காலை 11 மணி முதல் வாக்கு நிலவரம் தெரியவரும். மதியம் 1 மணிக்குள் முன்னணி நிலவரம் தெரிந்துவிடும்.

இந்த தொகுதியில் 6 முறை காங்கிரஸ் கட்சியும், 5 முறை அதிமுகவும், இரண்டு முறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT