தமிழகம்

‘பிகில்’, ‘கைதி’ உள்ளிட்ட படங்கள் சிறப்புக்காட்சிகள் உண்டா?- அமைச்சர் கடம்பூர் ராஜு ட்விட்டர் பதிவு

செய்திப்பிரிவு

சென்னை

தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் ‘பிகில்’, ‘கைதி’ உள்ளிட்ட படங்களுக்கு சிறப்பு காட்சிகள் இல்லை என நேற்று அறிவித்திருந்தார் அமைச்சர் கடம்பூர் ராஜு. ஆனால் அனுமதி அளிக்கப்பட்டதாக செய்தி வெளியானது. இந்நிலையில் அரசின் முடிவு என்ன என்பது குறித்து அமைச்சர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் விஜய்யும் அவரது புதுப்படங்கள் ரிலீஸ் சர்ச்சைகளும் உடன்பிறந்தவை எனலாம். திமுக ஆட்சிக்காலத்தில் ‘காவலன்’ உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் நேரத்தில் எழுந்த சர்ச்சை, பின்னர் அதிமுகவுக்கு ஆதரவு அளித்த நிலையில் ‘தலைவா’ படத்தில் டைம் டு லீட் என சேர்த்தது, சர்ச்சைக்குரிய வசனங்கள் மற்றும் அந்த நேரத்தில் அதிமுகவுடன் முரண்பாடு காரணமாக சிக்கல் எழுந்தது.

‘சர்க்கார்’ படத்தில் அரசை கடுமையாக விமர்சித்ததால் பல இடங்களில் மோதல் ஏற்பட்டது. தற்போது பெரும் எதிர்ப்பார்ப்புடன் வரும் பிகில் பட ஆடியோ வெளியீட்டில் அரசை விமர்சித்து பேச, படம் பல பிரச்சினைகளை சந்தித்தது.

‘பிகில்’ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு எந்தப்படத்துக்கும் சிறப்புக்காட்சிகளுக்கு அனுமதி இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்திருந்தார். சிறப்புக்காட்சிகளுக்கான கட்டணத்தை குறைத்தால் பரிசீலிப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் படத்துக்கான சிறப்புக்காட்சிக்கு அனுமதி அளித்ததாக தகவல் வெளியானது.

ஆனால் தற்போது அமைச்சர் கடம்பூர் ராஜு அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில் சிறப்புக்காட்சிக்கு அனுமதி இல்லை என்பது உறுதி என தெரிவித்துள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு:

“சிறப்புக் காட்சிகளை ரத்து செய்யக் கூறி அறிக்கை அனுப்பப்பட்டுவிட்டது. முன்பதிவு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக கட்டணம் வசூலிப்பது கட்டுப்படுத்தப்படும்”. என தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் தீபாவளி படங்களுக்கான சிறப்புக்காட்சிகள் இல்லை என்பது முடிவாகியுள்ளது.

SCROLL FOR NEXT