கோப்புப் படம் 
தமிழகம்

பேனர் வைக்க மாட்டோம்: அதிமுகவும் உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் 

செய்திப்பிரிவு

சட்டவிரோத பேனர் வைத்தது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, சுபஸ்ரீ மரணம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட கோரி சுபஸ்ரீ தந்தை ரவி தொடர்ந்த வழக்கு உள்ளிட்ட வழக்குகள் இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கின் விசாரணை அறிக்கை காவல் துறையினர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், பள்ளிக்கரணையில் அனுமதியில்லாமல் பேனர் வைத்த வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சுபஸ்ரீ மரண வழக்கின் விசாரணை முடிவின் இறுதி அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே, கட்சி நிகழ்ச்சிகளுக்கு பேனர் வைக்க வேண்டாம் என தொண்டர்களுக்கு அறிவுறுத்தி திமுக தரப்பில் பிரமாணபத்திரம் தாக்கல் செய்திருந்தது. தற்போது ஒருமாதம் கழித்து அதிமுக சார்பிலும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. பேனர் வைக்க வேண்டாம் என தொண்டர்களுக்கு அறிவுறுத்தி இருப்பதாக அதிமுக தரப்பில் தெரிவித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

சீன அதிபரை வரவேற்று பேனர் வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த டிராபிக் ராமசாமிக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், பேனர் வைக்க அரசின் விதிகளை பின்பற்ற வேண்டும் என்று தான் உத்தரவு பிறப்பித்ததாகவும், பேனர் வைக்க அனுமதி அளித்ததாக செய்தி வெளியிட்ட ஊடகங்களுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என சுபஸ்ரீயின் தந்தையின் கோரிக்கை குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், சுபஸ்ரீயின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு, விபத்து குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு ஏன் உத்தரவிட வேண்டும் என கேள்வி எழுப்பினர்.

மேலும், கூடுதல் இழப்பீடு தொடர்பாக மோட்டார் வாகன தீர்ப்பாயத்தை அணுகலாம் என அறிவுறுத்திய நீதிபதிகள், இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 22-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT