செய்தியாளர்களிடம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் நேற்று கூறியதாவது:தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பொது சுகாதார இதழியல் தொடர்பான புதிய முதுநிலை பட்டயப் படிப்பு (PG Diploma in Public Health Journalism) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஓராண்டு காலப் படிப்பு, 3 தாள்களைக் கொண்டது.
இப்படிப்பில் அடிப்படை சுகாதாரம், நோய்களின் தாக்கம், பொது சுகாதாரம் குறித்த விவரங்கள், மருத்துவம் சார் சட்டங்கள், மருத்துவக் குற்றங்கள், மருந்தியல், ஊட்டச்சத்து குறைபாடுகள், ஆயுஷ் பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பாடங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இளநிலை பட்டப் படிப்புடன் 6 மாத கால இதழியல் அனுபவம் உள்ளவர்கள் இதில் சேரலாம். மொத்தம் 8 இடங்கள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை பொருத்து அடுத்துவரும் ஆண்டுகளில் இடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். மாணவர் சேர்க்கை தொடக்கம்இப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை, விண்ணப்பப் பதிவு நடைமுறைகள் தொடங்கியுள்ளன. விருப்பம் உள்ளவர்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து சமர்ப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நவ. 6-க்குள் பல்கலைக்கழக முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முறைகேடு தடுக்க நடவடிக்கைமருத்துவப் படிப்புக்கான தேர்வில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து எழுத அனுமதித்ததாக 2 தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் சமீபத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. சம்பந்தப்பட்ட கல்லூரிகள் தங்களது வளாகத்தில் தேர்வு நடத்த தடை விதிக்கப்பட்டது.
முறைகேடுகளை தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். முறைகேடு கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்இவ்வாறு அவர் கூறினார்.
மூத்த பத்திரிகையாளரும் இப்படிப்பின் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான மாலன் கூறும்போது, “சமூகத்துக்கு பங்களிக்கும் அதிமுக்கிய பணிகளில் ஒன்று இதழியல். அதுகுறித்து பல படிப்புகள் இருந்தாலும், மருத்துவம் சார் இதழியல் தொடர்பாக பிரத்யேக படிப்புகள் பெரிய அளவில் இல்லை. மருத்துவத் துறையில் ஒரு சொல்லை மாற்றி எழுதினால்கூட அதன் பொருளும் புரிதலும் மாறிவிடும். எனவே நாளிதழ்கள், இதழ்களில் மருத்துவம் சார்ந்த செய்திகள் வெளியிடும் ஊடகவியலாளர்களுக்கு, அதை முறையாகக் கற்றுணர ஒரு படிப்பு அவசியம். அதைக் கருத்தில்கொண்டு பொது சுகாதார இதழியல் என்ற முதுநிலை பட்டயப் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது” என்றார்.