நாட்டைவிட்டு நாங்கள் எங்கும் ஓடவில்லை என வீடியோ வெளியிட்டுள்ளார் கல்கி சாமியார் விஜயகுமார்.
ஆந்திர மாநிலத்தைத் தலைமையிடமாகக்கொண்டு கல்கி பகவான் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. அம்மா பகவான், ஸ்ரீ பகவான் என அழைக்கப்படும் விஜயகுமார் என்பவர் இந்த ஆசிரமத்தை நிறுவினார். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆசிரமங்கள் உள்ள நிலையில் சென்னையில் மட்டும் 20 கிளைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள கல்கி ஆசிரமம் மற்றும் ஸ்ரீ பகவானின் மகன் என்.கே.வி. கிருஷ்ணா நடத்திவரும் நிறுவனங்கள் என 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டில் ஈடுபட்டனர்.
முதலீடுகள், பங்குதாரர்கள் குறித்தும் வெளிநாட்டு முதலீடுகள் குறித்தும் சோதனை நடத்தப்பட்டது.வருமான வரித்துறை 5 நாள் சோதனையில் 90 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.20 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள், கணக்கில் மறைக்கப்பட்ட மூலதனம் ரூ.61 கோடி கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், கல்கி சாமியார் குடும்பத்துடன் வெளிநாடு தப்பிவிட்டதாக தகவல் பரவின. இதனையடுத்து காணொலி ஒன்றை வெளியிட்டுள்ள சாமியார், "எல்லோரும் சொல்வதைப் போல் நாங்கள் இந்த நாட்டைவிட்டு எங்கும் ஓடவில்லை. நாங்கள் நேமத்தில் தான் உள்ளோம். நாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறோம். எங்களின் அன்றாட நடைமுறைகள் வழக்கம்போல்தான் நடந்து கொண்டிருக்கின்றன.
நேமம் ஆசிரமத்தில் வழக்கமான பூஜைகள் நடந்து வருகின்றன. யோகாவும், தியானங்களும் வழக்கம்போலவே நடத்தப்படுகின்றன. நீங்கள் எல்லோரும் இதைக் கடந்து செல்லுங்கள். எங்களிடமிருந்து ரூ.63 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் சர்ச்சை விரைவில் நீங்கும். உங்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன். விரைவில் தியான வகுப்பில் சந்திப்போம்" எனக் கூறுகிறார்.
பின்னர் அவரின் மனைவி அம்மா பகவான் காணொலியில் இடம்பெறுகிறார். அவர், "உங்கள் அனைவரையும் நேசிக்கிறோம். நீங்கள் மகிழும்படி அற்புதங்களைச் செய்வோம்" எனக் கூறுகிறார்.
இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.