திருட்டு போன ஆஞ்சநேயர் சிலை. 
தமிழகம்

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் ஆஞ்சநேயர் சிலை திருட்டு: காரில் வந்த கும்பல் குறித்து போலீஸ் விசாரணை

செய்திப்பிரிவு

தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில் சன்னதியில் இருந்த ஆஞ்சநேயர் சிலையை காரில் வந்து திருடிச் சென்ற கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரத்தில் தேனுபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இங்குள்ள துர்க்கையம்மன் பிரசித்தி பெற்றது. மூலவரின் வலதுபுறத்தில் உள்ள சுவாமி சன்னதி கோஷ்டத்தில், 1 அடி உயரமுள்ள கருங்கல்லால் ஆன பழமையான ஆஞ்சநேயர் சிலை பதிக்கப்பட்டிருந்தது.

நேற்று முன்தினம் விடுமுறை தினம் என்பதால், கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இரவு 8 மணிக்கு கோயில் குருக்கள் கணேஷ், சன்னதியை சுற்றி வந்தபோது, கோஷ்டத்தில் இருந்த ஆஞ்சநேயர் சிலை காணாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக கோயில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

பின்னர், கோயில் அதிகாரிகள் அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், இரவு 7 மணிக்கு ஒரு காரில் வந்த 5 பேர் மூலவர் சன்னதி அருகே வந்து வெகு நேரமாக பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். பிறகு 5 பேரில், 3 பேர் சுவரை மறைத்து கொண்டு நிற்க, 2 பேர் ஆஞ்சநேயர் சிலையை கைகளால் ஆட்டி பெயர்த்து எடுத்து, பைக்குள் வைத்து வெளியே எடுத்துச் சென்றதும், பின்னர், காரில் ஏறி 5 பேரும் அங்கிருந்து சென்றதும் பதிவாகி யுள்ளது.

இதுகுறித்து கோயில் நிர் வாகம் அளித்த புகாரின்பேரில், பட்டீஸ்வரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து சிலை திருடர்களை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT