தமிழகம்

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை: 3 நாட்கள் தொடர் விடுமுறையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

செய்திப்பிரிவு

தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் வசதிக்காக மறுநாள் திங்கட்கிழமையும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்.27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. பொதுவாக இந்துக்களின் பண்டிகைகளில் தீபாவளி பண்டிகை வர்த்தக நலன்கள் கலந்த பண்டிகையாகும். பரவலாக அனைவராலும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது, தீபாவளிக்கு போனஸ், ஷாப்பிங், சொந்த ஊர் செல்வது, தீபாவளி பண்டிகை கொண்டாடினாலும் மறுநாள் நோன்பு அனுசரிப்பது என மூன்று நாட்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும்.

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டத்தில் உள்ளவர்கள் வேலை, திருமணம் போன்ற ஏதாவது ஒரு காரணத்திற்காக சென்னையில் வசிப்பார்கள். இதேப்போன்று மற்ற மாவட்டங்களில் உள்ளவர்களும் அவர்கள் சொந்த ஊருக்கு பண்டிகை நேரத்தில்தான் செல்வது வழக்கம்.

இந்தமுறை தீபாவளி விடுமுறையே இல்லாத வகையில் ஞாயிற்றுக்கிழமை வந்ததால் பலருக்கும் குழப்பம் நீடித்தது. இந்நிலையில் பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை, திங்கட்கிழமை (தீபாவளிக்கு மறுநாள்) விடுமுறை விடுவது குறித்து அந்தந்த பள்ளிகள் முடிவெடுத்துக்கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

இதனால் தீபாவளிக்காக ஊருக்குச் செல்லும் அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் குழப்பத்திலேயே இருந்தனர். இந்நிலையில் இன்று தீபாவளி விடுமுறை குறித்து அரசு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அந்த அறிவிப்பில், “ தீபாவளி பண்டிகையை மக்கள் தங்கள் சொந்த ஊர்களில் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு வசதியாக தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் திங்கட்கிழமை(28/10) அரசு விடுமுறையாக அறிவிக்கவேண்டி பலமுனையிலிருந்து அரசுக்கு கோரிக்கையாக வந்தது. அதை அரசு கவனமுடன் பரிசீலித்து தீபாவளிக்கு மறுநாள் திங்கட்கிழமையை அரசு விடுமுறை தினமாக அறிவிக்கிறது.

மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அன்று விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் அடுத்த மாதம் இரண்டாவது சனிக்கிழமை (9/11)அன்று வேலை நாள் என அறிவிக்கப்படுகிறது”. என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு அனுப்பியுள்ளது. இதன்மூலம் தீபாவளிக்கு முந்தைய நாளான சனிக்கிழமை, மறுநாள் மற்றும் அடுத்த நாளான திங்கட்கிழமையும் 3 நாட்கள் தொடர் விடுமுறை அரசு அறிவிப்பின்மூலம் கிடைக்கிறது. இதனால் வெளியூர் செல்லும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT