தமிழகம்

ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க சிபிசிஐடி-க்கு மேலும் 3 மாதம் கெடு: தவறினால் சிபிஐக்கு மாற்றப்படலாம் என நீதிபதி தகவல்

கி.மகாராஜன்

முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டு பிடிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கப்படுகிறது. அதற்குள் குற்றவாளிகளை கண்டுபிடிக்கா விட்டால் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டி நிலை ஏற்படும் என நீதிபதி கண்டிப்புடன் கூறினார்.

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், 29.3.2012-ம் தேதி திருச்சியில் கொலை செய்யப் பட்டார். இவ்வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்ற னர். கொலை நடைபெற்று 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படவில்லை.

இதையடுத்து, ராமஜெயம் கொலை வழக்கை சிபிசிஐடி போலீஸாரிடம் இருந்து சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது மனைவி லதா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த மாதம் 12-ம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, ராமஜெயம் கொலை வழக்கு குற்றவாளி களை விரைவில் கைது செய்து விடுவோம் என சிபிசிஐடி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், சிபிசிஐடி போலீஸாருக்கு ஒன்றரை மாதம் அவகாசம் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இந்த அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி எஸ்.நாகமுத்து முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை தொடர்பாக சிபிசிஐடி எஸ்பி அன்பு வழங்கிய ரகசிய அறிக்கையை, கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன் நீதிபதியிடம் வழங்கினார்.

அந்த அறிக்கையை படித்த நீதிபதி, “குற்றவாளிகள் குறித்து முக்கிய தகவல்கள் கிடைத்துள் ளன. குற்றவாளிகளை நெருங்கி விட்டோம்” என கடந்த விசாரணையின்போது கூறியதால் அவகாசம் வழங்கப்பட்டது. இப்போதும் அதே தகவல்கள்தான் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை நடைபெற்று 3 ஆண்டு களுக்கு மேலாகியும் விசாரணை யில் எந்த முன்னேற்றமும் இல்லை’ என்றார்.

கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன் வாதிடும் போது, ‘குற்றவாளிகளை போலீ ஸார் நெருங்கியுள்ளனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு மேலும் அவகாசம் தரவேண்டும்’ என்றார்.

சிபிஐ வழக்கறிஞர் ஜெயக் குமார் வாதிடும்போது, ‘இந்த வழக்கை சிபிஐக்கு வழங்கினால் தொடக்கத்தில் இருந்து விசாரிக்க வேண்டும். இதனால் மேலும் தாமதம் ஏற்படும். விருதுநகரில் பத்து ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு பின் இரு குற்றவாளிகளை சிபிசிஐடி போலீஸார் கடந்த வாரம் கைது செய்தனர். இதனால் சிபிசிஐடி போலீஸாருக்கு மேலும் அவகாசம் தரலாம்’ என்றார்.

மனுதாரர் வழக்கறிஞர் எஸ்.ரவி வாதிடும்போது, சிபிசிஐடி போலீஸாருக்கு போதிய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. எனவே, வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்றார்.

இதைத்தொடர்ந்து சிபிசிஐடி எஸ்பி அன்புவிடம், ‘குற்றவாளி களை கண்டுபிடித்து விடுவீர்களா? நம்பிக்கை உள்ளதா?’ என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு குற்றவாளிகளை கண்டு பிடித்து விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என அன்பு தெரிவித்தார்.

பின்னர், ‘சிபிசிஐடி போலீ ஸாருக்கு மேலும் 3 மாதம் அவகாசம் தரலாம். இந்த 3 மாதத்தில் குற்றவாளிகளை கண்டு பிடிக்காவிட்டால் வழக்கை அரசு தானாகவே சிபிஐக்கு மாற்றும் என உத்தரவாதம் அளிக்கலாமா’ என கூடுதல் அட்வகேட் ஜெனரலிடம் நீதிபதி கேட்டார். அதற்கு ‘அவ்வாறு உத்தரவாதம் தர முடியாது. ஒரு வழக்கை சிபிஐக்கு மாற்றுவது அரசின் கொள்ளை முடிவு’ என்றார்.

இதையடுத்து, ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனால் சிபிசிஐடி போலீஸாருக்கு மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கப்படுகிறது. இது சிபிசிஐடி போலீஸாருக்கு அளிக்கப்படும் இறுதி வாய்ப்பு ஆகும். இந்த 3 மாதத்துக்குள் குற்றவாளிகளை கண்டுபிடிக்காவிட்டால் வழக்கை சிபிஐக்கு மாற்றும் நிலை ஏற்படும் என நீதிபதி உத்தரவிட்டார்.

விசாரணை அக்டோபர் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT