விழுப்புரம்
விக்கிரவாண்டி தொகுதியில் காலை 11 மணி நிலவரப்படி, 32.54% வாக்குகள் பதிவாகியுள்ளன.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 11,607. பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 11,546. திருநங்கைகள் 25 மற்றும் ராணுவத்தில் பணியாற்றுபவர்கள் 209 வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 23,387 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் . இத்தேர்தலில் அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வன், திமுக சார்பில் புகழேந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமி, தமிழ்ப் பேரரசு கட்சி சார்பில் கவுதமன் உட்பட 12 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தல் பணிகளில் 1,333 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 29 மைக்ரோ அப்சர்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
103 கிராமங்களுக்குட்பட்ட 275 வாக்குச்சாவடிகளில் இன்று (அக்.21) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று துணை ராணுவப் படையினர் மற்றும் போலீஸார் அணிவகுப்பு விக்கிரவாண்டி நகரின் முக்கிய வீதிகளில் நடைபெற்றது. மேலும் வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 275 வாக்குச்சாவடிகளில் 157 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. அதாவது 103 கிராமங்களில் 61 கிராமங்களில் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காலை 11 மணி நிலவரப்படி, 32.54% வாக்குகள் இத்தொகுதியில் பதிவாகியுள்ளன.
விக்கிரவாண்டி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "275 வாக்குச்சாவடிகளில் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. போலீஸாருடன் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியிலும், வருவாய்த் துறையினர் மற்றும் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் உள்ளனர். வாக்குப்பதிவு எங்கும் தாமதமாகத் தொடங்கவில்லை" எனத் தெரிவித்தார்.
இதனிடையே, விக்கிரவாண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விவிபாட் இயந்திர பழுதால் ஒரு மணிநேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியது. மேலும், ராதாபுரம், தொரவி கிராமங்களில் ஊருக்குள் இருந்த வெளியூர் அரசியல் கட்சியினரை போலீஸார் விரட்டியடித்தனர்.