பி.டி.ரவிச்சந்திரன்
கொடைக்கானல்
கொடைக்கானல் மலை கிராமங்களில் போலி பட்டா மூலம் ஆக்கிரமித்துள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பிலான அரசு நிலங்களை மீட்கும் நடவடிக்கையில் வருவாய் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். முதல் கட்டமாக 530 ஏக்கர் போலி பட்டா ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொடைக்கானல் மலை கிராமங்களில் விவசாயத்தை ஊக்குவிக்கும் பொருட்டு நிலமில்லா ஏழை விவசாயிகளுக்கு 1989-ம் ஆண்டு வரை பட்டா (டி.கே.டி. பட்டா) வழங்கப்பட்டது. இதன்படி கொடைக்கானல் மற்றும் சுற்றியுள்ள 15 மலை கிராமங்களில் 4,500 பட்டாக்கள் வழங்கப்பட்டன.
இதைப் பெற்றவர்கள் விவசாயத்துக்கு மட்டுமே நிலத்தை பயன்படுத்த வேண்டும். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, வேறு ஒரு ஏழை விவசாயிக்கு நிலத்தை விற்றுக் கொள்ளலாம். அவரும் விவசாயத்துக்காக மட்டுமே நிலத்தை பயன்படுத்த வேண்டும் என்று கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு ரியல் எஸ்டேட் துறை அபார வளர்ச்சி அடைந்தது. அப்போது கொடைக்கானல் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நிலங்கள் வாங்க வெளியூரைச் சேர்ந்தவர்கள் ஆர்வம் காட்டினர். இதனால் கொடைக் கானலில் உள்ள நிலங்களின் மதிப்பு பல மடங்கு உயர்ந்தது.
இதைப் பயன்படுத்தி, அப்போது பணியில் இருந்த வருவாய்த் துறையினர் ஏழை விவசாயிகளுக்கு பட்டா வழங்கியதுபோல் காலியாக இருந்த அரசு நிலங்களை டி.கே.டி. பட்டாக்களாக போலியாகத் தயாரித்து பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை வசதி படைத்தவர்களுக்கு தாரை வார்த்தனர்.
ரியல் எஸ்டேட் நடத்தி வந்த ஒரு சிலர் இந்த முறைகேட்டில் அதிகம் பயன்பெற்றது தெரிய வந்தது. சிலர் அந்த நிலத்தில் கட்டிடங்கள் கட்டி வருவதாக வருவாய்த் துறையினருக்கு தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தது.
இதைத் தொடர்ந்து கொடைக்கானலில் டி.கே.டி. பட்டாக்களின் நிலை குறித்து ஆய்வு செய்யுமாறு மாவட்ட வருவாய் அலுவலர் பா.வேலு, கொடைக்கானல் கோட்டாட்சியர் சுரேந்திரன் ஆகியோருக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி உத்தரவிட்டார்.
அப்போது 1989-ம் ஆண்டு வரை அரசு வழங்கிய டி.கே.டி. பட்டாக்கள் போல் பல போலி பட்டாக்கள் தயாரித்து 15 மலை கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடும் சிலர் பயன் அடைந்துள்ளனர். இவர்கள் கேடிகே பட்டா என்ற பெயரில் போலி பட்டாக்கள் பெற்று, இதை மனைகளாக மாற்றி பலருக்கு விற்பனை செய்துள்ளனர்.
இந்த முறைகேட்டுக்கு துணை போனதாக முதல் கட்டமாக கொடைக் கானல் தாலுகாவில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், நில அளவையர், துணை வட்டாட்சியர்கள் ஆகியோரை இடமாற்றம் செய்து திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து கொடைக்கானல் நகரம், வில்பட்டி மலை கிராமம் ஆகிய இடங்களில் மட்டும் 530 ஏக்கர் நிலங்களுக்கான போலி பட்டா முதற்கட்டமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் கொடைக்கானல் நகரையொட்டியுள்ள பகுதியில் மட்டும் ரூ.150 கோடி மதிப்பிலான 97 ஏக்கர் நிலத்துக்கான பட்டா ரத்து செய்யப்பட்டுள்ளது.
இனி மீதம் உள்ள 15 மலை கிராமங்களிலும் போலி பட்டா நிலங்கள் ஆய்வு செய்யும் பணி நடைபெற உள்ளது. இந்த நடவடிக்கை மூலம் மலைப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் அரசு நிலங்கள் மீட்கப்பட உள்ளன.
கொடைக்கானலில் வருவாய்த் துறை யினர் எடுத்து வரும் நடவடிக்கையால் ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் பலர் கலக்கத்தில் உள்ளனர். இவர்களிடம் நிலத்தை வாங்கியவர்களும் இழப்புக்கு ஆளாக வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர். இவர்கள் மட்டுமின்றி போலி பட்டா வழங்க உதவிய அப்போதைய கொடைக்கானல் வரு வாய் அலுவலர்களும் அச்சத்தில் உள்ளனர்.
கொடைக்கானலில் விதிகளை மீறி சீல் வைக்கப்பட்ட விடுதிகளைத் தொடர்ந்து மீண்டும் ஒரு பரபரப்பு நிலவு கிறது.
இது குறித்து கொடைக்கானல் கோட் டாட்சியர் சுரேந்திரன் கூறியதாவது:
அரசால் முறையாக வழங்கப்பட்ட டிகேடி பட்டாக்கள் ரத்து செய்யப்பட வில்லை. டிகேடி பட்டா என்ற பெயரில் பல போலி பட்டாக்கள் இருப்பது குறித்து வருவாய்த்துறையினருக்குப் புகார் வந்தது. அதன் மீதுதான் நடவடிக்கை எடுத்து வருகிறோம், என்றார்.