தமிழகம்

சென்னை டிஜிபி அலுவலகத்தில் ‘காவலர் வீரவணக்க நாள்’ அனுசரிப்பு: பணியில் உயிர்நீத்த காவலர்களுக்கு அஞ்சலி

செய்திப்பிரிவு

சென்னை

காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் பணியின்போது வீரமரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தி வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் டிஜிபி, சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதியன்று லடாக் பகுதியில் ஹாட் ஸ்ப்ரிங்ஸ் (Hot Springs) என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்புப் படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில், பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 21-ம் தேதி ‘காவலர் வீரவணக்க நாள்’ (Police Commemoration Day) அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி இன்று (21.10.2019) சென்னை காமராஜர் சாலையிலுள்ள தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் (டிஜிபி அலுவலகம்) உள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் காவலர் வீரவணக்க நாள் (Police Commemoration Day) அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கடந்த 01.09.2018 முதல் 31.08.2019 முடிய ஓராண்டு காலத்தில் இந்தியா முழுவதும் பணியின் போது வீரமரணமடைந்த 292 காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் ஜெ.கே திரிபாதி, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், (VSM, Flag Officer TamilNadu & Pudhucherry) K.J.குமார், கிழக்கு பிராந்திய கோஸ்ட் கார்டு ஐஜி S.பரமேஸ், தமிழக அட்வகேட் ஜெனரல் விஜயநாராயணன், தீயணைப்புத்துறை டிஜிபி சி.கே.காந்திராஜன், சிறப்பு புலனாய்வுப் பிரிவு இயக்குனர் ஹரிசேனா வர்மா, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலஷ்மி, துறைத் தலைவர்கள், முன்னாள் காவல்துறை இயக்குநர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள், அரசு அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

காவலர் வீர வணக்க நாள் நிகழ்ச்சிக்கு வீரமரணமடைந்த காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனின் மகன் ரூபன் பிரியராஜ், உட்பட வீரமரணம் அடைந்த காவலர்கள் ஆகியோரின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் கலந்துகொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

காவல்துறை தலைமை இயக்குநர் ஜே.கே.திரிபாதி பேசியபோது, கடந்த ஆண்டில் இந்தியாவில் பல பகுதிகளில் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது உயிரிழந்த காவலர்களின் பெயர்களை நினைவுகூர்ந்தார். பின்னர் துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரமணமடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

SCROLL FOR NEXT