சிவகாசி
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும். தேர்தலில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
சிவகாசியில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவந்த அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, "விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும். சட்டப்பேரவையில் அதிமுகவின் பலமும், எடப்பாடி பழனிச்சாமியின் கரமும் ஓங்குகிறது.
மதங்கள், இனங்கள் கடந்து அணைத்து தரப்பு மக்களும் விரும்பும் கட்சி அதிமுக. அதிமுக ஆட்சி நீடிக்க வேண்டும், எடப்பாடி பழனிசாமி முதல்வராக நீடிக்க வேண்டும் என நாங்குநேரி, விக்ரவாண்டி தொகுதி மக்கள் நினைப்பதால் அதிமுக வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.
இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சி. சர்க்காரியா கமிஷன் திமுகவிற்கு ஊழல் சான்றிதழ் வழங்கியுள்ளது. மு.க.ஸ்டாலின் பேசுவதைக் கேட்க தமிழகத்தில் யாரும் தயாராக இல்லை. அவருடைய பேச்சை மக்கள் கேளிக்கையாகவே பார்க்கிறார்கள் அரசியல் விமர்சகர்களே நகைக்கும் அளவில்தான் மு.க.ஸ்டாலினின் பேச்சு உள்ளது.
பேசுவதற்கு முன்பு என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் பேசுகிறார். பாரதிய ஜனதா கட்சி தீண்டத்தகாத கட்சி ஒன்றுமில்லை. பாஜக ஆளும் எந்த மாநிலங்களிலும் மதக் கலவரமோ, இனக் கலவரங்களோ ஏற்பட்டதில்லை. நல்ல விஷயங்களை ஆதரிப்பது எங்களது வழக்கம். ஜாதி, மதம் பாராமல் தமிழக மக்களின் வளர்ச்சிக்காக உழைக்கும் கட்சி அதிமுக என்பதை பல தேர்தல்களில் மக்கள் அளித்த முடிவின் மூலம் தெரியவந்துள்ளது.
ஆவின் பாலக நிறுவனங்களில் சில்லறை விற்பனையில் சில தவறுகள் நடைபெறுவதாக புகார் வந்துள்ளதால் சில்லறை விற்பனையை தவிர்த்து பாக்கெட் மூலம் விற்பனை செய்ய தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசுக்கு எதிரானவர்கள் சில்லறை விற்பனையில் புகுந்து தவறு செய்துவிடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் பால் முகவர்கள் , விற்பனையாளர்கள், பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டால் முதல்வரிடம் ஆலோசனை பெற்று தேவையான நிவாரண நடவடிக்கை எடுக்கப்படும்.
டெல்லியில் 'எருமை மாடு மேய்த்த' மாணிக்கம் தாக்கூர் இன்று விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார். அவரை மக்கள் விரும்பி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கவில்லை. விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்.
வடிவேலு நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான் என்று சொன்னதைப் போல மாணிக்கம் தாக்கூர் நானும் எம்.பி. தான் ; நானும் எம்.பி.தான் என்று கூறிக்கொள்கிறார்.
மேலும், என்னைப் பற்றி விமர்சனம் செய்தால் பெயர் கிடைக்கும் என்பதற்காக என்னை விமர்சனம் செய்து வருகிறார்.
காமராஜர் பிறந்த நாள் கொண்டாடுவதாகக் கூறி சிவகாசியில் உள்ள தொழில் அதிபர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்தவர் மாணிக்கம் தாக்கூர்.
பால்வளத் துறையில் முறைகேடு நடந்திருந்தால் மாணிக்கம் தாக்கூர் வழக்கு தொடரட்டும் வழக்கை சந்திக்க தயாராகவே உள்ளேன்.
ரஜினிகாந்த் நல்ல மனிதர் அவர் அரசியலுக்கு வரும் முன்பே அவரை விமர்சனம் செய்வது தவறு. விமர்சனம் வைக்கும் அளவிற்கு ரஜினிகாந்த் எந்தத் தவறும் செய்யாதவர். மீண்டும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வராக தொடர்வார்" என்று கூறினார்.